/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அனுமதியற்ற காட்டேஜ்கள்; குரங்கு, காட்டுமாடால் அவதி; கொடைக்கானல் 3வது வார்டு மக்கள் அவதி
/
அனுமதியற்ற காட்டேஜ்கள்; குரங்கு, காட்டுமாடால் அவதி; கொடைக்கானல் 3வது வார்டு மக்கள் அவதி
அனுமதியற்ற காட்டேஜ்கள்; குரங்கு, காட்டுமாடால் அவதி; கொடைக்கானல் 3வது வார்டு மக்கள் அவதி
அனுமதியற்ற காட்டேஜ்கள்; குரங்கு, காட்டுமாடால் அவதி; கொடைக்கானல் 3வது வார்டு மக்கள் அவதி
ADDED : ஏப் 26, 2025 03:43 AM

கொடைக்கானல் : அனுமதியற்ற காட்டேஜ்கள், குரங்கு, காட்டு மாடுகளால் அவதி என பல்வேறு பிரச்னைகளுடன் கொடைக்கானல் 3வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.
கீழ் புதுக்காடு, மேல் புதுக்காடு பகுதிகளை கொண்ட இந்தவார்டில் சரிவர அள்ளப்படாத குப்பையால் தொற்று பரவுகிறது.குரங்குகள் , காட்டுமாடுகள் நடமாட்டத்தால் மக்கள் தவியாய் தவிக்கின்றனர். சேதமடைந்த ரோடால் வாகன ஓட்டிகள் ,பாதசாரிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். துார்வாராத வாய்க்கால்களால் கழிவு நீர் தேங்கி தொற்று பரவும் அவல நிலை உள்ளது. சீசன் தருணங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வார்டு மக்கள் சந்திக்கின்றனர்.
இைடயூறாக மின் கம்பம்
முருகையா, வியாபாரி: புதுக்காட்டுப்பகுதியில் அள்ளப்படாத குப்பை ரோட்டோரம் சிதறி கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. கீழ் புதுக்காடு செல்லும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் உள்ளதால் அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை செல்ல முடியாத நிலை உள்ளது . புதுக்காட்டு பகுதியில் ரோடு அமைக்கும் பணியின் போது ஈமச்சடங்கு செய்யும் பகுதியை மண் கொண்டு மூடி உள்ளனர். தற்போது இவற்றை அகற்றாத நிலையில் நடுரோட்டில் வைத்து ஈமச்சடங்குகள் செய்யும் அவலம் உள்ளது. இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
குடியிருப்பு வாசிகள் அவதி
சக்திவேல், இயற்கை ஆர்வலர்: புதுக்காட்டு பிரிவிலிருந்து அரிசி கோடவுன் வரை ரோடு சேதமடைந்துள்ளது. வாய்க்கால்கள் துார்வாரப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. அனுமதியின்றி செயல்படும் காட்டேஜ்களின் கேளிக்கைகளால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது. சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். சீசன் நேரத்தில் கலையரங்கம் முதல் அப்சர்வேட்டரி இடையே நீடிக்கும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தற்போதைய ஒரு வழிப்பாதை போக்குவரத்து மாற்றம் வியாபாரிகளுக்கு ஏற்றதாக இல்லை. இவற்றை மீண்டும் பழைய முறையில் மாற்றி அமைக்க வேண்டும்.
மின்கம்பம் மாற்றப்படும்
ஜோதிமணி, கவுன்சிலர் (தி.மு.க.,): ரூ.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது.
ரோடு அமைக்கும் பணியின் போது சேதமடைந்த ஈமச்சடங்கு பகுதி சீரமைக்கப்படும். போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பம் மாற்றி அமைக்கப்படும். குரங்கு, காட்டுமாடு தொல்லைகளை கட்டுப்படுத்த வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதியின்றி செயல்படும் காட்டேஜ்களின் மீது நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சிசிடிவி கேமரா அமைக்க அறிவுறுத்தப்படும்.
போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா வாகனங்கள் துவக்கத்தில் சென்று வந்தது போல் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

