/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழம் தரும் மரங்களை பயிரிட்டு மகசூல் விவசாயிகள் மத்தியில் ஆசிரியர் புரட்சி
/
பழம் தரும் மரங்களை பயிரிட்டு மகசூல் விவசாயிகள் மத்தியில் ஆசிரியர் புரட்சி
பழம் தரும் மரங்களை பயிரிட்டு மகசூல் விவசாயிகள் மத்தியில் ஆசிரியர் புரட்சி
பழம் தரும் மரங்களை பயிரிட்டு மகசூல் விவசாயிகள் மத்தியில் ஆசிரியர் புரட்சி
ADDED : டிச 24, 2025 06:31 AM

வேடசந்துார்: வறட்சிப் பகுதியான வேடசந்துாரில் கம்பு, சோளம், நிலக்கடலை மட்டுமே பயிரிட முடியும் என நம்பியவிவசாயிகளுக்கு மத்தியில் ஸ்டார் ப்ரூட், கமலா ஆரஞ்சு, அவகோடா என பல்வேறு பணம் கொழிக்கும் பழம் தரும் மரங்களை நட்டு மகசூல் பார்த்து வருகிறார் ஓய்வு ஆசிரியர் ஏழுமலை 65.
வேடசந்துாரை சேர்ந்த இவர் தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் வெரியம்பட்டி அருகே கருவேல முட்கள் நிறைந்த காடாக கிடந்தது. இங்கு சுற்றுப்பகுதி மக்கள் ஆடு மாடுகளை மேய்த்து வந்தனர்.
இந் நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏழுமலை தனது நிலத்தில் மாற்று விவசாயத்தை செய்தால் என்ன என யோசித்தார் . இதன்பின் தனது தோட்டத்திலிருந்த கருவேல முட்கள் அனைத்தையும் மண் அள்ளும் இயந்திரம் கொண்டு அகற்றினார். தோட்டத்தை சுற்றி கம்பி வேலி , நுழைவு வாயில் கேட் அமைத்தார். ஏற்கனவே இருந்த பயன்பாடற்ற கிணற்றில போர்வெல் போட்ட நிலையில் கூடுதல் தண்ணீர் கொட்டியது. மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற ஆசிரியர் விவசாயிகள் செய்யக்கூடிய கம்பு, சோளம், நெல், கடலை என எந்த பயிர் வகைகளையும் பயிரிடவில்லை.
மாறாக நெல்லி, ஸ்டார் ப்ரூட், கமலா ஆரஞ்சு, சைனீஸ் ஆரஞ்சு, கொய்யா, வாட்டர் ஆப்பிள், வியட்நாம் சிவப்பு பலா, மலேசியன் தேன் பலா, வியட்நாம் ஆப்பிள் என 40க்கு மேற்பட்ட பழம் தரும் மரக்கன்றுகளை திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று, தேடிப்பிடித்து வாங்கி வந்து தனது தோட்டத்தில் பயிரிட்டு சொட்டுநீர் பாசனம் அமைத்து கவனித்து வருகிறார்.
தற்போது அனைத்து மரக்கன்றுகளும் நன்கு வளர்ந்த நிலையில் நெல்லி, வாட்டர் ஆப்பிள், அவகோடா, கொய்யாவில் மகசூல் வந்த நிலையில் அவற்றை பறித்தெடுத்து
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட மார்க்கெட்களுக்கு கொண்டு செல்கிறார்.
யாருமே இப்பகுதியில் விளைவிக்காத வாட்டர் ஆப்பிளில் 400 கிலோ மகசூல் எடுத்து நல்ல விலைக்கு விற்றுள்ளார். நெல்லி, தென்னை விவசாயமும் கூடுதலான அளவில் கை கொடுக்கிறது. இவரது அசாத்திய திறமையை நேரில் கண்டவர்கள் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஓய்வு ஆசிரியர் ஏழுமலை கூறியதாவது: மலைப் பகுதிகளில் மட்டுமே விளைவிக்க கூடிய வாட்டர் ஆப்பிள், கமலா ஆரஞ்சு, அவகோடா உள்ளிட்ட பல வகைகளை நாம் பயிரிட்டால் என்ன என யோசித்தேன். அதேபோல் படிப்படியாக திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மரக்கன்றுகளை வாங்கி வந்து நட்டு வைத்தேன்.
அனைத்து மரக்கன்றுகளும் நன்கு வளர்ந்துள்ளன. தற்போது 60 வகையான பழ மரங்களை வளர்த்து வருகிறேன். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கூடுதலான மகசூல் கிடைக்கும் நிலையில் போதிய ஆட்களை நியமித்து மகசூலை முறையாக எடுத்து திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சென்னை உள்ளிட்ட மார்க்கெட்களுக்கு அனுப்பி வைப்பேன் என்றார்.

