/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பத்து ஆண்டுகளாக தீராத சப்வே பிரச்னை: அலட்சயத்தில் ரயில்வே
/
பத்து ஆண்டுகளாக தீராத சப்வே பிரச்னை: அலட்சயத்தில் ரயில்வே
பத்து ஆண்டுகளாக தீராத சப்வே பிரச்னை: அலட்சயத்தில் ரயில்வே
பத்து ஆண்டுகளாக தீராத சப்வே பிரச்னை: அலட்சயத்தில் ரயில்வே
ADDED : டிச 17, 2024 04:23 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சாமியார் புதுார் சப்வே பணிகள் முறுமை பெறாமல் இருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடைபடுவதால் 10 ஆண்டுகளாக 100க்கு மேற்பட்ட விவசாய குடும்பங்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
திண்டுக்கல் -பாலக்காடு அகல ரயில் பாதையில் பல சப்வேக்கள் போடப்பட்டுள்ளது. இவற்றில் சிலவற்றிற்கு மட்டும் கூரை வசதி செய்யப்பட்டு, மழை காலத்தில் தேங்கும் நீரை அகற்ற மின் மோட்டார் வசதிகளும் உள்ளது.
இன்னும் சில சப்வேக்களில் கூரை வசதி இல்லாததால் மழைக்காலத்தில் நீர்த்தேக்கம் போல் தண்ணீர் தேங்கி போக்குவரத்தை தடை செய்கிறது. இவற்றிற்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் உள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே சாமியார்புதுார் சப்வேயை தாண்டி நுாற்றுக்கு மேற்பட்ட விவசாய குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள 400 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் பெய்யும் மழை நீர் வெளியேற வாய்க்கால் இருந்தது.
ரயில்வே பொதுப்பணித்துறை சப்வே பணிகளின் போது அந்த வாய்க்காலை அடைத்து விட்டதால் காட்டாற்று வெள்ளம் வெளியேற வழியில்லாமல் சப்வேயிலேயே தேங்கி விடுகிறது.
சமீபத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சப்வேயை மூட, அருகில் இருந்த விவசாய நிலங்களில் உடைப்பை ஏற்படுத்தி தேங்கியது.
ரயில்வே நிர்வாகம் இதுவரை இந்த நீரை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சப்வேக்கு கூரை அமைத்து தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனகூறியும் இதுவரை எவ்வித பணிகளும் நடக்கவில்லை.
இதனால் சப்வேயை தாண்டி செல்ல முடியாமல் பள்ளிக் குழந்தைகள், விவசாயிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
அதிகாரிகள் அலட்சியம்
பாரதி, விவசாயி: இந்த சப்வேவை மழைக்காலத்தில் பயன்படுத்த முடிவதில்லை. தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தவும் எவ்வித நடவடிக்கையும் இருப்பதில்லை.
இப்பகுதியில் குடியிருக்கும் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயி குடும்பங்கள் அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்றாலும் ஆம்புலன்ஸ் வர முடியாது. பள்ளி குழந்தைகள் மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது.
சப்வேயில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விளை நிலங்கள் சேதம்
செல்வராஜ், விவசாயி: இப்பகுதியில் உள்ள நிலங்களில் இருந்து வெளியேறும் மழை நீர் இங்குள்ள வாய்க்கால் வழியாக வெளியேறி முத்து சமுத்திரம் கண்மாய்க்கு செல்லும்.
ஆனால் ரயில்வே துறையினர் இந்த வாய்க்காலை அடைத்து விட்டதால் மழை நீர் முழுவதும் சப்வேயில் தேங்கி அருகிலுள்ள விளை நிலங்களை சேதம் அடைய செய்கிறது.
இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். மேலும் மீண்டும் விவசாயப் பணிகளை செய்வதற்கு நீண்ட நாட்கள் ஆகிறது.

