ADDED : செப் 22, 2024 02:10 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - கேரள எல்லையில் உள்ளது கிளாவரை. இப்பகுதியில் போடி தலசு என்ற மலைப்பகுதியில் உருவாகும் நீர் வழித்தடம் செருப்பன் ஓடையாக கீழ்கிளாவரை கிராமத்தை வந்தடைகிறது.
இந்த நீரோடையால், 2,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்கு ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள நர்சரிகொடை பைன் மரக்காடுகள் அருகே நீர் வழித்தடத்தில், 200 மீட்டர் அளவிற்கு ஆழமான நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர், அதிகாரிகளை அழைத்து வந்து ஆய்வு செய்தனர். நிலப்பிளவு குறித்து புவியியல் துறையினர் ஆய்வு செய்து காரணத்தை கண்டறிய கிளாவரை பகுதி மக்கள் கோரி உள்ளனர்.
கொடைக்கானல் ஆர்.டி.ஓ., சிவராம் கூறுகையில், ''கிளாவரையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் இப்பகுதி உள்ளது. சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து கலெக்டரிடம் தெரிவிக்கப்படும். பிளவு ஏற்பட்டதற்கான காரணத்தை அறிந்து மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

