/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் நீர் வழித்தட பராமரிப்பில் அலட்சியம்
/
மாவட்டத்தில் நீர் வழித்தட பராமரிப்பில் அலட்சியம்
ADDED : மே 02, 2025 06:53 AM

கன்னிவாடி: நீர் வழித்தட பராமரிப்பில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால் பல நீராதாரங்கள் கழிவுகள் குவிப்பு, ஆக்கிரமிப்பு வழித்தட மூடலால் தூர்ந்து போகும் அவல நிலை நீடிக்கிறது.
மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து உருவாகும் வரத்து நீர் பல்வேறு அணைகளை நிரப்பி, வாய்க்கால்கள் மூலம் கிராமப்புற கண்மாய்களின் பாசனம், தண்ணீர் ஆதாரத்தை வழங்குபவையாக அமைந்துள்ளன. மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான நீர்நிலைகள், பரப்பளவு, பயன்பாட்டு வகை அடிப்படையில், குளம், குட்டை, ஊரணி என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தல் மட்டுமின்றி அடிப்படை குடிநீர் ஆதாரமாகவும் இவற்றில் பெரும்பான்மையானவை அமைந்துள்ளன.
மாவட்டத்திலுள்ள 2,539 நீர் நிலைகள் மாவட்ட நிர்வாக பட்டியலில் நீராதார அமைப்புக்களாக இடம்பெற்றுள்ளன. இதுதவிர 100 ஏக்கருக்கும் கூடுதலான பரப்புள்ள 107 கண்மாய்கள் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளன. இருப்பினும் பெரும்பாலானவற்றின் நீர்பிடிப்பு வழித்தடம், வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பின்மையால் தூர்ந்துள்ளன.
இவற்றை பராமரிக்கும் அரசுத்துறை அமைப்புகளின் அலட்சியத்தால், மழை நீர் சம்பந்தப்பட்ட நீராதாரங்களை வந்தடைவதில் சிக்கல் நீடிக்கிறது. அதேவேளையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடியிருப்பு, தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் நீர்நிலைகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அனுப்பப்படுகிறது. நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதிப்பது மட்டுமின்றி தொற்றுநோய் அபாயம், மனித உயிர்களின் வாழ்க்கை முறையில் பிரச்னைகளை அளிக்கவும் தவறுவதில்லை
அதிகாரிகள் அலட்சியத்தால், வாழும் சூழலின் உயிர்த் தன்மை வெகுவாக குறையத் துவங்கியுள்ளது. நீராதாரங்களை உருவாக்க முடியாத நிதிப்பற்றாக்குறை சுமை நிறைந்த சூழலில், முன்னோர் உருவாக்கிய நீர்நிலைகளை பராமரிக்க வேண்டியது அவசிய தேவையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் குளம், குட்டைகளில் கழிவுநீர் சேகரமாவதை தடுத்து நீராதார மேம்பாட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த முன்வர வேண்டும்.

