/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைகள் ஏராளம்... தீர்வுக்கு வழியை காணோம் மன்றாடும் மாசிலாமணிபுரம் குடியிருப்போர்
/
குறைகள் ஏராளம்... தீர்வுக்கு வழியை காணோம் மன்றாடும் மாசிலாமணிபுரம் குடியிருப்போர்
குறைகள் ஏராளம்... தீர்வுக்கு வழியை காணோம் மன்றாடும் மாசிலாமணிபுரம் குடியிருப்போர்
குறைகள் ஏராளம்... தீர்வுக்கு வழியை காணோம் மன்றாடும் மாசிலாமணிபுரம் குடியிருப்போர்
ADDED : மார் 07, 2024 06:19 AM

திண்டுக்கல்: பல ஆண்டுகளாக போடப்படாத ரோடுகள், நிரந்தரமாகும் குப்பை பிரச்னை, காவிரி குடிநீர் வரத்து குறைவு, அதிகரிக்கும் தெருநாய்கள் கூட்டம், இருளை பயன்படுத்தி உலாவும் சமூக விரோத கும்பல்கள், பொழுதுபோக்கு, ஆரம்ப சுகாதார வளாகம் வசதியின்மை, மேம்பாலம் திறந்தும் சப்வே திறக்காததால் வழியின்றி வாடும் கொடுமை என அடுக்கடுக்கான துன்பங்களை அனுபவிக்கின்றனர் மாசிலாமணிபுரம் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்.
திண்டுக்கல் மாசிலாமணிபுரம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சுப்ரமணியன், துணைத் தலைவர் ஜெயராம், செயலாளர் அபுதாஹீர், பொருளாளர் அசோகன், செயற்குழு உறுப்பினர்கள் செல்வ ஆரோக்கியம், சேகர் கூறியதாவது:
தாமரை நகர் முதல் ராமர் காலனி, என்.ஜி.ஓ., காலனி வரையிலான ரோடுகள் போடப்பட்டு பல ஆண்டுகளாகிறது. இந்த ரோடுகளின் கற்கள் பெயர்ந்து வாகன டயர்கள் சிதறுவதால் விபத்துக்கள் பல தினமும் நடக்கிறது. மாசிலாமணிபுரம் குறுக்கு சந்துக்களில் உள்ள ரோடுகளை முழுமையாக போடாமல் பேட்ச் ஒர்க் என்ற பெயரில் பூசி
செல்கின்றனர். இந்த அரைகுறை பணியானது நாளடைவில் ரோடுகளை மேலும் அதிகமாகவே சேதமடைய செய்கின்றன. சாக்கடை துார் வாருவது அவரவர் பொறுப்பு என்று வகுத்து கொண்டோம். ஆனால் பொதுஇடத்தில் செல்லும் சாக்கடைகளில் துார் வார யாருமின்றி உள்ளது.
பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் துாய்மை பணியாளர்களை பார்த்தே பல மாதங்களாகிறது. குப்பையை ஆங்காங்கே கொட்டி தீயிட்டு எரிப்பதால் நாங்கள் வசிக்கும் பகுதியானது புகை மூட்டமாக உள்ளது.
மாவட்டத்தின் முக்கிய பிரச்னையான தெருநாய்களின் தொல்லை அதிகம் உள்ளது. இரவு நேர வாகன பயணத்தின்போது இவைகள் விரட்டிவருவதால் பலமுறை விபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது.
நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் பத்து நாட்களுக்கு ஒருமுறை சிறிது நேரமே வருவதால் எங்களால் குடிநீர் தேவையை கட்டுக்குள் வைக்க முடியாமல் போகிறது. குடிநீர் சப்ளை நேரத்தை அதிகரித்து தர வேண்டும்.
சந்துரு நகர் பின்புறமுள்ள கழிவு நீர் தேக்க பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக தெரிகிறது. அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்து காவல்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கழிவு நீர் குட்டையாக உள்ள அந்த பகுதியை சீரமைத்து மழைநீர் சேமிப்பு திடலாக்கி நடைபயிற்சி மேடை, சிறுவர்களுக்கான பூங்காக்கள் அமைக்க வேண்டும். சிலுவத்துார் மேம்பாலம் திறந்து நான்கு மாதங்களாகியும் சப்வே எனும் சுரங்க வழிப்பாதை வழிப்பணி நிறைவடையாமல் உள்ளதால் ரயில்வே பாதையை கடந்து வர சிரமமாக உள்ளது. அவசரமாக பாலத்தை திறந்து மெதுவாக வேலை பார்ப்பதால் மாசிலாமணிபுரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் துன்பத்தை அனுபவித்து வருகிறோம். இந்த குறைகளை எல்லாம் கிராம சபை கூட்டத்தில் முறையிட்டு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தால் அது அரசியல் கட்சி கூட்டம் போல் பொதுமக்களின் குறைகளின் கேட்க நேரமின்றி அவர்களுக்குள்ளாகவே புகழுரைகளில் கூட்டத்தை முடிக்கின்றனர். இதுசம்மந்தமாக பலதரப்பில் முறையிட்டும் வளர்ச்சி பணிகள் செயல்பாடு என்பது தேய்ந்தபடிதான் உள்ளது என்றனர்.

