/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடிக்கடி அடைக்கப்படும் ஜி.டி.என்.ரோடு ரயில்வே கேட்டால் அவதி: மேம்பாலம் அமைக்கலாமே ரயில்வே, நெடுஞ்சாலை துறை
/
அடிக்கடி அடைக்கப்படும் ஜி.டி.என்.ரோடு ரயில்வே கேட்டால் அவதி: மேம்பாலம் அமைக்கலாமே ரயில்வே, நெடுஞ்சாலை துறை
அடிக்கடி அடைக்கப்படும் ஜி.டி.என்.ரோடு ரயில்வே கேட்டால் அவதி: மேம்பாலம் அமைக்கலாமே ரயில்வே, நெடுஞ்சாலை துறை
அடிக்கடி அடைக்கப்படும் ஜி.டி.என்.ரோடு ரயில்வே கேட்டால் அவதி: மேம்பாலம் அமைக்கலாமே ரயில்வே, நெடுஞ்சாலை துறை
UPDATED : ஜன 02, 2024 06:36 AM
ADDED : ஜன 02, 2024 06:05 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டிலிருந்து ரவுண்ட்ரோடு செல்லும் ஜி.டி.என்.ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி பூட்டப்படுவதால் இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
ஆண்டுக்கணக்கில் தொடரும் இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க ரயில்வே, நெடுஞ்சாலை துறை முன் வர வேண்டும்.
திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் அடியிலிருந்து ரவுண்ட்ரோடு ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஜி.டி.என்.,ரோடை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இவ்வழித்தடத்தில் ரயில்வே கேட் ஒன்று உள்ளது.
இங்கு அடிக்கடி பழநி வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் வந்து செல்கின்றன. ரயில்கள் வரும் நேரத்தில் குறைந்தது 15 நிமிடத்திற்கும் மேல் ரயில்வே கேட் பூட்டப்படுகிறது.
ரவுண்ட்ரோடு ஜி.டி.என்., ரோட்டில் பள்ளிகள் அதிகமாக பயன்பாட்டிலிருப்பதால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை காலை,மாலை நேரங்களில் கட்டுக்கடங்காமல் இருக்கும். பள்ளி நேரத்திலும் பூட்டப்படுவதால் மாணவர்கள் ஆபத்தான முறையில் ரயில் பாதையை கடந்து செல்கின்றனர்.
வாகனங்களில் பெற்றோருடன் வரும் மாணவர்கள் காத்திருந்து ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர்.ஒருசிலர் வேறு பாதை வழியாக மாறி செல்லும் நிலையும் அடிக்கடி தொடர்கிறது.
இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் நேரமும் தாமதமாகிறது. பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர், மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள், முதியவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இது ஒருபுறம் பராமரிப்பு பணிகள் என முன் அறிவிப்பு இல்லாமல் காலை முதல் மாலை வரை பூட்டுகின்றனர். இதனால் திருச்சி ரோட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்ல நினைக்கும் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். தொடரும் இப்பிரச்னை குறித்து மக்கள் பலமுறை ரயில்வே நிர்வாகம், நெடுஞ்சாலையில் புகாரளித்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
முன்னறிவிப்பின்றி பூட்டு
ஆர்.எஸ்.எம்., பாலசந்தர், வழக்கறிஞர், திண்டுக்கல்: திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தின் சர்வீஸ் ரோட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன, பஸ் ஸ்டாண்ட் சிலுவத்துார் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான மக்கள் ஜி.டி.என்.,ரோடை தான் பயன்படுத்துகின்றனர். இவ்வழியில் பள்ளிகள் அதிகளவில் செயல்படுவதாலும் எந்நேரமும் மக்கள் சென்ற வண்ணமாக இருக்கின்றனர். இந்நிலையில் அடிக்கடி இங்குள்ள ரயில்வே கேட் முன்னறிவிப்பின்றி பூட்டப்படுகிறது. மணிக்கணக்கில் பூட்டப்படும் இந்த கேட்டால் பல தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும். அப்படி கட்டினால் மக்கள் பயனடைவார்கள்.
கவனிக்க வேண்டும்
மைதீன்பாவா, மாவட்ட செயலாளர், வி.சி.க., திண்டுக்கல்: ஜி.டி.என்.,ரோடு ரயில்வே கேட்டை பொருத்த மட்டில் ரயில்வே நிர்வாகம் யாருக்கும் அறிவிப்பு கொடுக்காமல் அடிக்கடி பராமரிப்பு பணி செய்கின்றனர். இதனால் பல முறை ரயில்வே கேட் காலை முதல் மாலை வரை பூட்டப்படுகிறது. இவ்வழியில் செல்லும் வியாபாரிகள் முதல் அனைத்து தரப்பினரும் வேறு பாதையில் மாற்றி செல்கின்றனர். அதுமட்டுமின்றி கனரக வாகனங்களும் இப்பாதையில் வந்து மீண்டும் நகருக்குள் வருவதால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

