/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றுச்சூழலை காக்கும் சிந்தலவாடம்பட்டி ஊராட்சி
/
சுற்றுச்சூழலை காக்கும் சிந்தலவாடம்பட்டி ஊராட்சி
ADDED : பிப் 26, 2024 07:01 AM

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிகளவில் மரக்கன்றுகளை நடவு செய்து அதை பராமரித்தும் வருகின்றனர் சிந்தலவாடம்பட்டி ஊராட்சியினர்.
விஞ்ஞான வளர்ச்சியால் ஒருபுறம் எண்ணற்ற வசதிகளை நமக்கு கிடைத்த போதிலும், மறுபுறம் நச்சு புகையை வெளியிடும் வாகனங்களால் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம்.
இதனால் பருவநிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு காற்று மாசுபட்டு சுவாசிப்பதற்கு துாய்மையான காற்று கிடைப்பதில்லை.
இதிலிருந்து விடுபடுவதற்கு அதிகமான மரங்களை வளர்ப்பது அவசியம் என்பதை உணர்ந்து ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதியில் தன்னார்வல அமைப்புகளும், ஊராட்சிகளும் பல வகையான மரங்களை நட்டு வேலி அமைத்து பாதுகாக்கின்றன. பல இடங்களில் மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்தும் வருகின்றன. இன்னும் சில மாதங்களில் இவை பெரிய மரங்களாக வளர்ச்சி அடைந்து பசுமையாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்றம் பெற்று விடும். அந்த வகையில் மாசில்லா ஒட்டன்சத்திரத்தை உருவாக்குவதில் தனது பங்களிப்பாக சிந்தலவாடம்பட்டி ஊராட்சியானது 4000 க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரிக்கிறது. இதன் மூலம் ஊராட்சியில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க முனைப்பு காட்டி வருகிறது. சில மாதங்களுக்கு முன் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஊராட்சி நிர்வாகம் பல வகையான மரங்களை நடும் முயற்சியில் இறங்கியது. ரோட்டின் இரு புறங்கள்,ஓடைகள்,அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வந்ததால் தற்போது பல இடங்களில் அவை மரங்களாக வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கின்றன. இன்னும் கூடுதல் மரக்கன்றுகள் நடும் பணியில் இந்த ஊராட்சி இறங்கி உள்ளது.
4000 மரக்கன்றுகள் நடவு
கே.பன்னீர்செல்வன்,ஊராட்சித் தலைவர்,சிந்தலவாடம்பட்டி: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் அறிவுறுத்தலின்படி அரசுக்கு சொந்தமான காலியிடங்கள் ரோட்டுப் பகுதிகள், ஓடைகளில் மரக்கன்றுகளை நடுகிறோம். மா, புளி, பூவரசு, வேம்பு, புங்கன், அரசமரம் என பல வகையான மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். முன்பு நடப்பட்ட மரக்கன்றுகளை முறையாக பராமரித்ததால் தற்போது சிறு மரங்களாக வளர்ந்துள்ளன. மரங்கள் சூழ்ந்த பசுமை ஊராட்சியாக மாற்ற இன்னும் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட முடிவு செய்துள்ளோம். தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் இன்னும் அதிகப்படியான மரக்கன்றுகளை நடவு செய்ய உள்ளோம்.
அதிக இலக்கு உள்ளது
வி.காளீஸ்வரி, ஊராட்சி துணைத் தலைவர்,சிந்தலவாடம்பட்டி: இனி வரும் காலங்களில் அமைச்சரின் ஆலோசனைப்படி இன்னும் அதிகமான மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். மரக்கன்றுகளை நட்டவுடன் விட்டு விடாமல் அவற்றுக்கு தண்ணீர் ஊற்றி, துணி வேலி அமைத்து முறையாக பராமரிக்கிறோம்.
இதன் பயனாக மரக்கன்றுகள் சிறு மரங்களாக வளர்ந்தது. இவை பெரிய மரங்களாக வளர்ந்தும் இந்த ஊராட்சியே குளிர்ச்சியாக மாறிவிடும். இதன் மூலம் உயிர்களுக்கு தீங்கு ஏற்படுத்தாத சுற்றுச் சூழலை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

