/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செம்மண் திருட்டால் சின்னாபின்னமான சின்னக்குளம்
/
செம்மண் திருட்டால் சின்னாபின்னமான சின்னக்குளம்
ADDED : செப் 20, 2025 04:27 AM

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை சின்ன குளத்தில் இரவு நேரங்களில் சண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு லாரிகளில் செம்மண் திருட்டு நடைபெறுவதால் குளம் குண்டும் குழியுமாக மாறி வருகிறது.
80 ஏக்கரில் உள்ள சின்னக்குளம் நிறைந்தால் சுற்றுப்பகுதி விவசாய கிணறுகள் ,போர்வெல்களுக்கு போதிய நீராதாரம் கிடைக்கும். ஆர்.கோம்பை ராமகிரி மலையடிவாரப் பகுதியில் இருந்து சிற்றோடைகள் வழியாக இக்குளத்திற்கு நீர் வந்து சேர்கிறது. குளத்தில் தற்போது தண்ணீர் இல்லாததால் இரவு நேரங்களில் செம்மண்ணை மண் அள்ளும் இயந்திரங்கள் வைத்து பகிரங்கமாக அள்ளி செல்கின்றனர்.
மேலோட்டமாக செம்மண்ணை அள்ளிய நிலையில் தற்போது பாறை சட்டுகள் நிறைந்த மண்ணையும் மிக ஆழமாக அள்ளி வருகின்றனர்.
மேற்பகுதியில் உள்ள களிமண்ணை எல்லாம் சுரண்டி எடுத்து விட்டதால் குளத்தில் தண்ணீரே தேங்கினாலும் உறிஞ்சப்பட்டு குளம் விரைவில் வரண்டு விடும். குளத்தின் பல்வேறு பகுதிகளில் ஆழமான குழிகளை தோண்டி உள்ளதால் ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கு ஆபத்தானதாகவே முடியும்.
இதோடு குளத்தில் கருவேல முட்கள் மூடி கிடக்கின்றன. முட்களை அகற்றி குளத்தை சுத்தம் செய்து செம்மண் திருட்டை தடுக்க கலெக்டர் முன் வர வேண்டும்.