ADDED : ஏப் 21, 2024 04:52 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் அண்ணா பல்கலை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் அறைகள் சீலிடப்பட்டு மூடப்பட்டுள்ளதோடு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. திண்டுக்கல் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலையில் நடக்கிறது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதலே அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் அண்ணா பல்கலை மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. மலைப் பகுதிகளில் உள்ள இயந்திரங்கள் நேற்று காலை வந்தடைந்தன.
ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடப்பதால் சட்டசபை தொகுதி வாரியாக பிரத்யேக அறைகளில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து அனைத்து கட்சி வேட்பாளர்கள், பிரமுகர்களின் முன்னிலையில் அறைகள் பார்வையிடப்பட்டு சீலிடப்பட்டன. கலெக்டர் பூங்கொடி, பொதுப்பார்வையாளர் பிரபுலிங் கவாலிகட்டி ,போலீஸ் பார்வையாளர் மனோஜ் குமார் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தன.
அறையின் கதவில் ஒட்டப்பட்ட வெள்ளை நிறத்தாளில் வேட்பாளர்கள் , முகவர்கள் கையெழுத்திட்டனர். இதன் பின் ஓட்டுசதவீதம் பதிவான விவரங்கள் கட்சியின் முகவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

