/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நெட் தேர்வில் கணினி பிரச்னையால் 43 பேரில் 19 பேர் மட்டுமே அனுமதி தேர்வு எழுத முடியாமல் 24 பேர் ஏமாற்றம்
/
நெட் தேர்வில் கணினி பிரச்னையால் 43 பேரில் 19 பேர் மட்டுமே அனுமதி தேர்வு எழுத முடியாமல் 24 பேர் ஏமாற்றம்
நெட் தேர்வில் கணினி பிரச்னையால் 43 பேரில் 19 பேர் மட்டுமே அனுமதி தேர்வு எழுத முடியாமல் 24 பேர் ஏமாற்றம்
நெட் தேர்வில் கணினி பிரச்னையால் 43 பேரில் 19 பேர் மட்டுமே அனுமதி தேர்வு எழுத முடியாமல் 24 பேர் ஏமாற்றம்
ADDED : ஆக 29, 2024 02:08 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே நெட் தேர்வு மையத்தில் கணினி பிரச்னையால் 43 பேரில் 19 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பல்கலை, கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.,) சார்பில் ஆண்டுக்கு 2 முறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறது .
இந்தாண்டு நெட் தேர்வு ஜூன் 19-ல் நடத்தப்பட்டது. முறைகேடுகள் நடைபெற்றதாக தகவல்கள் வந்ததையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கான மறுதேர்வு ஆக., 21 முதல் செப்., 4- வரை கணினி வழியில் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமையால் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி திண்டுக்கல் -மாவட்டம் வத்தலகுண்டு ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் இதற்கான தேர்வு நேற்று நடந்தது. 60 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 43 பேர் வந்தனர்.
கணினி பிரச்னையால் 19 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் 24பேர் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தேர்வெழுதாதவர்கள் கூறுகையில்' தேர்விற்கு தாமதமாகத்தான் அனுமதித்தனர். இதிலும் 19 பேர்தான் முதலில் அனுமதிக்கபட்டனர். மற்றவர்கள் வெளியில் காத்திருந்தோம். உள்ளே தேர்வெழுத சென்றவர்களின் கணினிகளும் சரிவர வேலை செய்யவில்லை. தேர்வு நேரம் முடியும் வரை இதே நிலை நீடித்தது. இந்த மையத்தில் தேர்வு எழுதியவர்களுக்கென தனி தேர்வு நடத்தப்படும் என தெரிவித்திருக்கின்றனர். ஆனால் தேர்வில் அனுமதிக்கப்படாத எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை' என்றனர்.
தேர்வின் திண்டுக்கல் ஒருங்கிணைப்பாளர் மாதுரியிடம் கேட்டபோது, ''குறைந்த மின் அழுத்தம் காரணமாகவே கணினிகள் வேலை செய்யவில்லை. இருப்பினும் 19 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். கணினி பிரச்னை குறித்து என்.டி.ஏ, விற்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
விரைவில் இது குறித்த அறிவிப்பு தேர்வு எழுதாதோர் இணையதளத்தில் வெளியிடுவர். இந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும் என என்.டி.ஏ., உறுதி கொடுத்துள்ளது '' என்றார்.

