/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரேஷன் பருப்பு, பாமாயில் வழங்கலில் குளறுபடி
/
ரேஷன் பருப்பு, பாமாயில் வழங்கலில் குளறுபடி
ADDED : ஆக 27, 2024 01:40 AM
கன்னிவாடி : கன்னிவாடி பகுதியில் ரேஷன் கோதுமை, பருப்பு, பாமாயில் வழங்கலில், ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது அம்பலமாகி வருகிறது.
விலைவாசி உயர்வு எதிரொலியாக ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் ரேஷனில் வழங்கப்படும் உணவு பொருட்கள் ஆதாரமாக நம்பி உள்ளனர். ஒவ்வொரு நபருக்கும் அரிசி இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.
பருப்பு, பாமாயில், கோதுமை வழங்கலில் குளறுபடி நீடிக்கிறது. கன்னிவாடி பகுதியில் பல ரேஷன் கடைகளில் உரிய பில் வழங்குவதில்லை. துண்டுச் சீட்டில் சுருக்கமாக குறியிட்டு வழங்குகின்றனர். இவற்றை கார்டுதாரர் புரிந்து கொள்ள முடிவதில்லை.
ஸ்மார்ட் கார்டுகளில் பதிவு செய்த பொருள், அளவு வினியோகத்தின்போது மாறுபடுகின்றன. அலைபேசி குறுந்தகவல் வருவதிலும் தாமதம், ஏமாற்றம், ஊழியர்களுடன் வாக்குவாதம், பிரச்னைகள் தொடர்கின்றன.
கன்னிவாடி சமூக ஆர்வலர் நந்தகுமார் கூறுகையில், ''வழங்காத கார்டுகளுக்கு இரு மாதங்களுக்கு உரிய பருப்பு, பாமாயில் தரப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் பல ரேஷன் கடைகளில் சரிவர வழங்கப்படுவதில்லை.
வழங்கல் பதிவு செய்தபோதும் துண்டுச்சீட்டில் அரிசி மட்டுமே குறிப்பிடுகின்றனர். நபருக்கான ஒதுக்கீடு அளவும் குறைத்து வினியோகம் நடக்கிறது.
கோதுமை வினியோகம் முழுமையாக மறைக்கப்படுகிறது. கார்டுதாரர்களுக்கு கிடைப்பதில்லை. அலைபேசி குறுந்தகவலில் முறைகேடு வெளிப்பட்ட நிலையில் அதிகாரிகளிடம் புகார் செய்தும் பலனில்லை.
சிவில் சப்ளை துறை அதிகாரிகள் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் '' என்றார்.

