/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோடையை சமாளிக்க 15 லட்சம் லிட்டர் தண்ணீர்
/
கோடையை சமாளிக்க 15 லட்சம் லிட்டர் தண்ணீர்
ADDED : ஏப் 04, 2024 03:59 AM
திண்டுக்கல் : கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் திண்டுக்கல் மாநகராட்சியில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று முதல் கூடுதலாக 15 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் வாழும் மக்கள் பயன்பாட்டிற்காக காவிரி தண்ணீர்,ஆத்துார் அணை தண்ணீர் குடிநீராக வழங்கப்படுகிறது. காவிரியிலிருந்து தினமும் 50 லட்சம் லிட்டர் நீரை , திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் வடிகால் வாரியம் வழங்குகிறது. ஆத்துாரிலிருந்தும் 1கோடி 60 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
தற்போது கோடை காலம் தொடங்கியதால் 48 வார்டுகளில் 24 வார்டுகளுக்கு மட்டும் தான் தினமும் குடிநீர் சப்ளை வழங்கப்படுகிறது.
மற்ற 24 வார்டுகளிலும் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இதனால் பொது மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் இல்லாமல் வாடும் நிலை ஏற்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகளுக்கும் புகார்கள் தெரிவித்தனர். மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன்,செயற்பொறியாளர் சுப்பிரமணியன்,சரவணக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மாரியப்பன் ஆலோசனை நடத்தினர். கோடையை சமாளிக்க காவிரியிலிருந்து கூடுதலாக 15 லட்சம் லிட்டர் தண்ணீர் பொது மக்கள் பயன்பாட்டிற்காக வழங்க கோரினர். இதை தொடர்ந்து நேற்று முதல் திண்டுக்கல் மாநகராட்சிக்கு காவிரியிலிருந்து கூடுதலாக 15 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 48 வார்டுகளிலும் தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. பொது மக்கள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுள்ளது.

