/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்
/
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 10, 2024 03:50 AM
பென்னாகரம்: பென்னாகரம் தாலுகா, பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட குறவன் தின்னை கிராமத்தில் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பெண்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
எங்களுடைய ஊர் மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வருதில்லை.
இதையெடுத்து, சில நாட்களுக்கு முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது, அதிகாரிகள் வந்து கூடிய விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால், இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இங்கு செயல்பட்டு வந்த ஆழ்துளை கிணறு மோட்டாரும் பழுதாகி, அவிழ்த்து எடுத்து சென்றனர். இதுவரை சரி செய்யவில்லை. குடிநீருக்காக இரண்டு கி.மீ., செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இல்லையெனில், டிராக்டரில் தண்ணீரை விலைக்கு வாங்கி வருகிறோம். இதனால், ஆடு, மாடுகளை அடிமட்ட விலைக்கு விற்று வருகிறோம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து தர வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

