/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிள்ளையில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி... மந்தம்; விரைந்து முடிக்க 8 கிராம மீனவர்கள் கோரிக்கை
/
கிள்ளையில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி... மந்தம்; விரைந்து முடிக்க 8 கிராம மீனவர்கள் கோரிக்கை
கிள்ளையில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி... மந்தம்; விரைந்து முடிக்க 8 கிராம மீனவர்கள் கோரிக்கை
கிள்ளையில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி... மந்தம்; விரைந்து முடிக்க 8 கிராம மீனவர்கள் கோரிக்கை
ADDED : ஆக 04, 2025 07:22 AM

கிள்ளை : கிள்ளையில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிள்ளை கடற்கரை யோர கிராமங்களான பட்டரையடி, பில்லுமேடு, சின்னவாய்க்கால், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர்., நகர், சிசில் நகர், தளபதி நகர் மீனவர்கள் சின்ன வாய்க்கால் முகத்துவாரம் வழியாக படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். 600க்கு மேற்பட்ட படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறது.
இங்கு, பிடிக்கப்படும் மீன் வகைகள் உள்ளூர் மீன் வியாபாரிகள் மூலம் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சின்னவாய்க்கால் முகத்துவாரம் வெள்ளம், மழைக்காலங்களில் அடிக்கடி துார்ந்துபோய்விடும்.
இதனால், கிள்ளை மற்றும் சுற்றியுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் வெள்ளாற்று முகத்துவாரம் மற்றும் பழையாறு வழியாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதனால், மீனவர்களுக்கு காலநேரமும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க சின்னவாய்க்கால் முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்தித் தர வேண்மென, கடந்த 15 ஆண்டிற்கு மேலாக மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மீனவர்களின் கோரிக்கையையேற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நபார்டு ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் மதிப்பில், தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன் இறங்குதளம் மற்றும் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணிகள் துவங்கியது.
மீன்கள் ஏலக்கூடம், படகு அணையும் கூடம், மீன் வலை பின்னும் கூடம், சாலை வசதி, உயர்கோபுர மின் விளக்கு உள்ளிட்ட பணிகள் மட்டும் முடிந் துள்ளது. குறிப்பாக முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி மட்டும் முடிக்கப்படாமல் உள்ளது.
இப்பணி இரண்டு ஆண்டுக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால், கட்டுமான பணிகள் இன்னும் முடியவில்லை. ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என மீன் வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால், மீனவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

