/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
36 மையங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது; கடலுார் தொகுதியில் 72.40 சதவீதம் ஓட்டுப்பதிவு
/
36 மையங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது; கடலுார் தொகுதியில் 72.40 சதவீதம் ஓட்டுப்பதிவு
36 மையங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது; கடலுார் தொகுதியில் 72.40 சதவீதம் ஓட்டுப்பதிவு
36 மையங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது; கடலுார் தொகுதியில் 72.40 சதவீதம் ஓட்டுப்பதிவு
ADDED : ஏப் 20, 2024 06:12 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் உள்ள 36 ஓட்டுச்சாவடி மையங்களில் மின்னணு இயந்திரம் பழுதானதால் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது. அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பழுதை சரி செய்தனர்.
கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம் (தனி) ஆகிய இரு லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகள் கடலுார் லோக்சபா தொகுதியில் அடங்கும். சிதம்பரம் லோக்சபா தொகுதியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய சட்டசபை
தொகுதிகளும், குன்னம், அரியலுார், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளும் அடங்கியுள்ளன. கடலுார் மாவட்டத்தில் உள்ள 2302 ஓட்டுச்சாவடிகளில் 187 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானாவையாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
தேர்தல் பணிகளில் 7056 பேர் ஈடுபட்டனர். 4300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் சிரமமமின்றி வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலி தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வெயில் காலமாக இருப்பதால் ஓட்டுச்சாவடிகளில் குடிநீர் மற்றும் சாமியானா பந்தல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி கமிட்டி பள்ளியிலும், அய்யப்பன் எம்.எல்.ஏ., கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியிலும், மேயர் சுந்தரி ராஜா திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் பள்ளியிலும் ஓட்டு பதிவு செய்தனர்.
ஓட்டுப்பதிவு மந்தம்
தேர்தல் அன்று அதிகாலை 6:30 மணிக்கே வாக்காளர்கள் ஓட்டளிக்க ஓட்டுச்சாவடி மையத்திற்கு ஆர்வத்துடன் வருகை தருவர். ஆனால், நேற்று நடந்த தேர்தலில் கடலுார் மாநகர பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப் பதிவு மந்தமாக இருந்தது. மக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் எளிதாக சென்று ஓட்டளித்தனர். சில இடங்களில் மட்டுமே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். கிராமங்களில் சற்று கூடுதலாக ஓட்டுப்பதிவு நடந்தது. காலை 9 மணி நிலவரப்படி 9.88 சதவீதமும், 11 மணிக்கு 24.44 சதவீதமும், மதியம் 3:00 மணி வரை 52.13 சதவீதமும், மாலை 5 மணிக்கு 64.10 சவீதம் ஓட்டுகள் பதிவாகின.
36 மையங்களில் இயந்திரம் பழுது
மாவட்டத்தில் கடலுார் சட்டசபை தொகுதி உட்பட பல்வேறு தொகுதிகளில் ஓட்டுப் பதிவு துவங்குவதற்கு முன்பாக 26 மையங்களில் மின்னணு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டது. உடன், அதிகாரிகள், இயந்திரங்களை சரி செய்தனர். கடலுார் சட்டசபை தொகுதியில் துாக்கணாம்பாக்கம், கண்டக்காடு, வேணுகோபாலபுரம், வண்ணாரப்பாளையம் உட்பட 10 ஓட்டுச்சாவடி மையங்களி்ல் ஓட்டுப் பதிவு துவங்கிய சில மணி நேரங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டது. உடன், இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு ஓட்டுப் பதிவு தொடர்ந்து நடந்தது. இயந்திரங்கள் பழுதானதால் ஓட்டுப் பதிவு சில இடங்களில் தாமதமாக துவங்கியது.
முதல் முறை வாக்காளர்கள் 18 வயது நிரம்பிய முதல் ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுச்சாவடி மையத்திற்கு வந்து மகிழ்ச்சியாக ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றினர்.
ஓட்டுப்பதிவு நிறைவு
கடலுார் மாவட்டத்தில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சில இடங்களில் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்டர் வழங்கி 7 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 7 மணி நிலவரப்படி கடலுார் தொகுதியில் 72.40 சவீதம் ஒட்டுப்பதிவானது. ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முகவர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

