/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில்..! போக்குவரத்து பாதிப்பால் தொடரும் விபத்து
/
பெண்ணாடம் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில்..! போக்குவரத்து பாதிப்பால் தொடரும் விபத்து
பெண்ணாடம் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில்..! போக்குவரத்து பாதிப்பால் தொடரும் விபத்து
பெண்ணாடம் புறவழிச்சாலை திட்டம் கிடப்பில்..! போக்குவரத்து பாதிப்பால் தொடரும் விபத்து
ADDED : மே 22, 2024 12:59 AM
பெண்ணாடம் : பெண்ணாடம் புறவழிச்சாலை திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பதுடன், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில், பெண்ணாடம் குறுவட்ட தலைமையிடமாகவும் மற்றும் தேர்வுநிலை பேரூராட்சியாகவும் உள்ளது. இவ்வழியாக பஸ், லாரி, சிமென்ட் லோடு லாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. இங்கு அரசு, தனியார் பள்ளிகள், பேரூராட்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வங்கிகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் சிமென்ட் ஆலைகள் உள்ளன.
இதனால் பழைய பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்குள் வருவோர் பழைய பஸ் நிலையம் முதல் கிழக்கு வாள்பட்டறை வரையிலான சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்தி செல்கின்றனர். தள்ளுவண்டி கடைகளும் சாலையை ஆக்கிரமித்து கொள்கிறது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதுடன் வாகன விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இதனால், பெண்ணாடத்தில் புறவழிச்சாலை அமைக்கக்கோரி வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடந்தாண்டு மே மாதம் 15ம் தேதி கொசப்பள்ளம், அரியராவி, திருமலை அகரம், பெ.கொல்லத்தங்குறிச்சி, கொத்தட்டை ஆகிய பகுதிகளில் நிலஅளவீடு, 'ட்ரோன்' மூலம் எல்லைகள் மற்றும் துாரம் அளவீடு பணிகள் நடந்தது.
ஜூன் மாதம் கொத்தட்டை அருகே ரயில்பாதையையொட்டி, புறவழிச்சாலைக்கு மேம்பாலம் அமைக்க மூன்று இடங்களில் போர்வெல் மூலம் மண் பரிசோதனை பணியும் துவங்கியது. இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு குறையும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் புறவழிச்சாலைக்கு இதுவரை எவ்வித பணிகளும் துவங்காததால் பெண்ணாடம் கடைவீதி சாலையில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் வாகன விபத்துகள் அடிக்கடி நிகழ்வது மட்டும் தொடர் கதையாகிறது.
எனவே, கிடப்பில் போடப்பட்ட பெண்ணாடம் புறவழிச்சாலை திட்டப்பணியை விரைந்து துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

