/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வருவாய் ரூ. 920 செலவு ரூ. 2000 நகராட்சியில் அவலம்
/
வருவாய் ரூ. 920 செலவு ரூ. 2000 நகராட்சியில் அவலம்
ADDED : ஜன 15, 2025 12:40 AM
நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு கோடி செலவில் பஸ் நிலையம் கட்டப்பட்டு, 16 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஒரு சில நாட்கள் மட்டுமே பஸ்கள் உள்ளே சென்று வந்தன.
அதிகாரிகள் அலட்சியத்தால் அதன்பிறகு எந்த பஸ்களும் உள்ளே செல்வதில்லை. ஆனால் பஸ் நிலையம் இருப்பதால் நகரின் வழியே செல்லும் பஸ்களில் தினமும் கட்டணமாக தலா பத்து ரூபாய் வசூல் செய்கின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பஸ்களில் வசூல் செய்வதை தனியாருக்கு ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்திற்கு குத்தகை ஏலம் விட்டனர். தினமும் 920 ரூபாய் மட்டுமே வசூல் ஆவதால், தொடர்ந்து ஏலம் எடுக்க ஆள் இல்லை. இதனால் ஏலம் விடவில்லை.
ஆனால் தினமும் காலை மாலை என இரண்டு துப்புரவு பணியாளர்கள் மூலம் பஸ்களில் கட்டணம் வசூல் செய்கின்றனர். இவர்களது மாதம் சம்பளம் மொத்தம் 60 ஆயிரம் ஆகும். இதனால் கட்டணம் வசூலிக்க நாள் ஒன்றுக்கு ரூ. 2000 செலவு ஏற்படுகிறது. ஆனால், இவர்கள் ஒரு நாளைக்கு 920 வீதம் மாதத்திற்கு ரூ. 28 ஆயிரம் மட்டுமே வசூல் செய்கின்றனர்.
இதன் மூலம் நகராட்சிக்கு மாதத்துக்கு 32 ஆயிரம் வருமானம் இழப்பு ஏற்படுகிறது. துப்புரவு பணிக்கு போதுமான ஆட்கள் இல்லாததால் தனியாரையும் துப்புரவு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
குறைந்த கட்டணத்துக்கு ஏலம்விட சட்டபடி அனுமதியில்லை என்றாலும், உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று மாறுதல் செய்யலாம். ஆனால் அதிகாரிகள் அதற்கு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதால் நகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

