/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.1.22 கோடியில் பூங்கா அமைக்கும் பணி... ஜரூர்; பெண்ணாடம் பகுதி பொது மக்கள் வரவேற்பு
/
ரூ.1.22 கோடியில் பூங்கா அமைக்கும் பணி... ஜரூர்; பெண்ணாடம் பகுதி பொது மக்கள் வரவேற்பு
ரூ.1.22 கோடியில் பூங்கா அமைக்கும் பணி... ஜரூர்; பெண்ணாடம் பகுதி பொது மக்கள் வரவேற்பு
ரூ.1.22 கோடியில் பூங்கா அமைக்கும் பணி... ஜரூர்; பெண்ணாடம் பகுதி பொது மக்கள் வரவேற்பு
ADDED : மார் 11, 2024 06:04 AM
பெண்ணாடம், : பெண்ணாடத்தில் ரூ.1.22 கோடியில் முக்குளம் பூங்கா அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருவதால் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் பெண்ணாடம் தேர்வு நிலை பேரூராட்சியாகவும், வருவாய் குறுவட்ட தலைமையிடமாகவும் உள்ளது. பேரூராட்சியின் 15 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு சாதாரண மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. கடந்த சில ஆண்டுகள் முதல் தற்போது வரை பேரூராட்சியின் எல்லைகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன.
நகரில் இடநெருக்கடி காரணமாக முதியோர்கள், சிறுவர்கள், பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்ள சாலைகள், தெருக்களில் நடைபயிற்சி மேற்கொண்டனர். ஆனால் வாகன போக்குவரத்து அதிகரிப்பால் நடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இதுதொடர்பாக பெண்ணாடம் நகர் பகுதியில் நடைமேடையுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம், மக்கள் பிரதிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
கடந்தாண்டு கருணாநிதி நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் நடைபயிற்சியுடன் கூடிய பூங்கா அமைக்க 1 கோடியே 22 லட்சம் ரூபாய் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பெ.கொல்லத்தங்குறிச்சி செல்லும் சாலையில் பிடாரி செல்லியம்மன் கோவில் அருகே முக்குளம் தேர்வு செய்யப்பட்டது.
முக்குளம் துார்வாரும் பணி முடிவடைந்த நிலையில் தற்போது கரைகள், கம்பி வேலிகள் அமைக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.
பெண்ணாடம் பேரூராட்சியில் நடைமேடையுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணி பெண்ணாடம் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள், முதியோர்கள், பெண்கள், சிறுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெண்ணாடம் பகுதி மக்கள் கூறுகையில், 'பெண்ணாடத்தின் நீண்டநாள் கோரிக்கையில் இதுவும் ஒன்று. பூங்கா அமைத்து அதனை பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும்.
சமூக விரோதிகள் வருவதை தடுக்க வேண்டும். இந்த பூங்கா அமைத்தால் பெண்ணாடம் மட்டுமல்ல அருகிலுள்ள கிராம முதியோர்கள் முதல் பலர் நடைபயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியத்தை பெறலாம்' என்றார்.

