/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்டி முடிப்பதற்குள் இடிந்து விழும் இந்த காலத்தில் நுாற்றாண்டை கடந்து கம்பீரமாய் நிற்கும் 'தொட்டி பாலம்' பாலத்துடன் கூடிய, சுரங்க பாசன வாய்க்கால்
/
கட்டி முடிப்பதற்குள் இடிந்து விழும் இந்த காலத்தில் நுாற்றாண்டை கடந்து கம்பீரமாய் நிற்கும் 'தொட்டி பாலம்' பாலத்துடன் கூடிய, சுரங்க பாசன வாய்க்கால்
கட்டி முடிப்பதற்குள் இடிந்து விழும் இந்த காலத்தில் நுாற்றாண்டை கடந்து கம்பீரமாய் நிற்கும் 'தொட்டி பாலம்' பாலத்துடன் கூடிய, சுரங்க பாசன வாய்க்கால்
கட்டி முடிப்பதற்குள் இடிந்து விழும் இந்த காலத்தில் நுாற்றாண்டை கடந்து கம்பீரமாய் நிற்கும் 'தொட்டி பாலம்' பாலத்துடன் கூடிய, சுரங்க பாசன வாய்க்கால்
ADDED : அக் 09, 2024 04:20 AM

'சர் ஆர்தர் காட்டன்'இப்பெயர் தெரியாத தமிழக விவசாயிகள் இருக்க முடியாது. அதிலும் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளில் இந்த பெயர் தெரியாத விவசாயிகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு, தமிழகத்தில், நீர்ப்பாசன கட்டுமானத்தில் அர்ப்பணிப்புஉணர்வோடு, பெரும் பங்காற்றியவர்.
அதிலும், இன்றைய நவீன கட்டுமானத்துறைக்கே சவால் விடும் வகையில், 125 ஆண்டுகளுக்கு முன்பே, சிதம்பரம் அருகே சுரங்கப்பாதை வழியாக பாசன நீர் செல்லும் வகையில், தொட்டி பாலம் அமைத்து விவசாயத்தை மேம்படுத்தியவர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், தனது 16 வயதில், கிழக்கிந்திய கம்பெனியின், பொறியியல் பிரிவில் சேர்ந்த அவர், தனது வாழ்நாளை தமிழகத்தின், நீர்ப்பாசனத்திற்காக அர்ப்பணித்தவர். இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என்றழைக்கப்பட்ட இவர், 1821-ம் ஆண்டு, சென்னை, தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக சேர்ந்தார். பின்னர், 1822ம் ஆண்டு, ஏரி பராமரிப்பு துறையில் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு, உதவியாளராக இருந்தார்,
தமிழகத்தில், தஞ்சை, கடலூர், கோவை, மதுரை, திருநெல்வேலி உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரி, கண்மாய், குளங்களை பராமரித்து, நீர் வினியோகம் செய்யும் பணியை மேற்கொண்டார்.
கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி ஆற்றில், கொள்ளிடம் பிரியும் இடத்தில் அமைந்துள்ள முக்கொம்புக்கு வரும் தண்ணீர், வீணாக கடலில் கலப்பதை தடுக்க கொள்ளிடத்தில் தடுப்பணையை (மேலணை) கட்டியதும் இவர்தான். அதையடுத்து, அதற்கு கீழ், தஞ்சை மாவட்டத்தில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1856 -ம் ஆண்டு, அணைக்கரை என்னும் இடத்தில் 'கீழணை' கட்டி, கொள்ளிடம் ஆற்று நீரை தேக்கி, வீராணம் ஏரிக்கு திருப்பி விட்டார். இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
அதே சமயம், கொள்ளிடத்தில் இருந்து ஆதனூர் அருகே ராஜன்வாய்க்கால் பிரிகிறது. இந்த வடக்கு ராஜன் வாய்க்கால், முட்டம், ஓமாம்புலியூர், கருப்பூர், புளியங்குடி, அதங்குடி, பருத்திக்குடி, குமராட்சி, கோப்பாடி வரை சென்று, மணவாய்க்கால் நீர், வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேறும் உபரி நீருடன் சேர்ந்து பழைய கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து விடும்.
கோப்பாடி வரை வந்த தண்ணீர், பழைய கொள்ளிடம் வழியாக வீணாவதை தடுத்து, தவர்த்தாம்பட்டு, மெய்யாத்தூர், அகரநல்லுார், காட்டுக்கூடலூர், பூலாமேடு, சிவாயம், நாஞ்சலூர், நளன்புத்தூர், கொடிப்பள்ளம், கிள்ளை பொன்னந்திட்டு வரை 16 கிராம விவசாயிகளின் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்த சர் ஆர்தர் காட்டன், அதற்காக பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, கோப்பாடியில், 1899-ம் ஆண்டு 'தொட்டி பாலத்துடன் கூடிய சுரங்கப்பாதை'யை திட்டத்தை செயல்படுத்தினார்.
அதாவது ஆற்றை கடந்து செல்வதற்கும், அதன் வழியாக தண்ணீரை கொண்டு சென்று, பாசன வசதி செய்வதற்கும் ஒரே திட்டமாக, இந்த பாலத்தை கட்டினார்.
அதில், 15 அடியில், திறந்த வெளி வாய்க்கால் பாலம், 15 அடியில் சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் செல்லும் பாசன வாய்க்கால் வசதி, அதற்கு மேல் வாகனங்கள் சென்று வரும் வகையில், போக்குவரத்து வசதி என, தனது நீர்ப்பாசன கட்டுமானத்தை கட்டி முடித்தார்.
செங்கற்கள், சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் உள்ளிட்ட கலவை மூலம் கட்டப்பட்ட இந்த பாலம், கடும் வெயில், மழை, புயல் என பல்வேறு இயற்கை இடர்பாடுகளை கடந்து, 125 ம் ஆண்டுகளாகியும் இன்றைக்கும் கம்பீரமாக காட்சி அளித்து வருவதோடு, விவசாயிகளின் உயிர் நாடியாகவும் விளங்கி வருகிறது.
இந்த தொட்டி பாலம் மூலம் 16 கிராமங்களில் உள்ள 35 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இன்றளவும் பாசன வசதி பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த பாலத்தின் அருகில், கடந்த 25 ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட பாலம் கூட, தற்போது சேதமாகி விட்டது.
கட்டி முடிப்பதற்குள் இடிந்து விழும் இன்றைய காலத்தில், 125 ஆண்டுகளாக கம்பீரமாக காட்சி தருவதோடு, 16 கிராம விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

