/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செப்டம்பர் 1ம் தேதி முதல் நேரடி கொள்முதல் நிலையம்
/
செப்டம்பர் 1ம் தேதி முதல் நேரடி கொள்முதல் நிலையம்
ADDED : ஆக 27, 2024 05:04 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய இ.டி.பி.சி., இணையத்தில் வரும் கே.எம்.எஸ்., 24-25 கொள்முதல் பருவம் வரும் 1ம் தேதி முதல் துவங்குகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், கடலுார் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய வசதியாக ஏற்கனவே, பயன்பாட்டிலுள்ள இ.டி.பி.சி., இணையத்தில் வரும் கே.எம்.எஸ்., 24-25 கொள்முதல் பருவம் வரும் 1ம் தேதி முதல் துவங்குகிறது.
இதில் விவசாய நிலத்தின் பட்டா நகல் மற்றும் சிட்டா அடங்கல் ஆதார் வங்கி புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள கொள்முதல் நிலையங்களில் வழங்கி இ.டி.பி.சி., மூலம் பதிவேற்றம் செய்து விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் விவசாயிகள் தொடர்புடைய கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து கொள்ளலாம்.
கொள்முதல் நிலையத்தின் பெயர், கொள்முதல் செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஓ.டி.பி., எண் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் உரிய காலத்தில் நெல்லை விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நெல் சன்ன ரகம் அடிப்படை ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,320 ரூபாய்க்கு மற்றும் தமிழக அரசின் ஊக்கத்தொகை 130 ரூபாயாக குவிண்டால் ஒன்றுக்கு 2,450 ரூபாய் வழங்கப்படும். அதேப்போல பொது ரகம் அடிப்படை ஆதார விலை 2,300 மற்றும் ஊக்கத்தொகை 105 ரூபாயாக குவிண்டால் ஒன்றுக்கு 2,405 ரூபாய் வழங்கப்படும்.
விற்பனை செய்வதற்கும் எந்தவித தொகையும் விவசாயிகள் வழங்க வேண்டியதில்லை.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

