/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை வேர்வாடல் நோய்க்கு நிவாரணம் வருமா... வராதா? விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் அதிருப்தி
/
தென்னை வேர்வாடல் நோய்க்கு நிவாரணம் வருமா... வராதா? விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் அதிருப்தி
தென்னை வேர்வாடல் நோய்க்கு நிவாரணம் வருமா... வராதா? விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் அதிருப்தி
தென்னை வேர்வாடல் நோய்க்கு நிவாரணம் வருமா... வராதா? விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் அதிருப்தி
ADDED : மே 14, 2024 12:57 AM
பொள்ளாச்சி;வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு, அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. அதைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும்படி விவசாயிகளுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தெளிவான பதில் அளிக்காததால் விவசாயிகள் அதிருப்திஅடைந்துள்ளனர்.
தமிழகத்தில், தென்னை சாகுபடியில் பொள்ளாச்சி முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, தென்னையில், வெள்ளை ஈ தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது, தென்னையில் கேரள வேர் வாடல் நோய், குறுத்துக்கட்டை நோய் பாதிப்பு அதிகமுள்ளது.
இந்நிலையில், தேங்காய்க்கு விலையும் இல்லை. இப்பிரச்னைகளால் தென்னை விவசாயிகள் பாதித்துள்ளனர். அதிலும், சமீபத்தில் வேர் வாடல் நோயால் ஏராளமான தென்னை மரங்கள் மடிந்து விட்டன. அவற்றை, விவசாயிகள் வெட்டி அகற்றி வருகின்றனர்.
தென்னை விவசாயிகளின் இப்பிரச்னைகள் குறித்து, 'தினமலர்' நாளிதழில் தொடர் கட்டுரை வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, கடந்த மார்ச் 13ம் தேதி, பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், தென்னை வேர்வாடல் நோய் மீட்பு திட்டத்துக்காக, 14.04 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.
இதன்படி, வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்டு, வெட்டி அகற்றப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வீதம் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 32,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும், வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக, மறு நடவு செய்ய ஒரு விவசாயிக்கு அதிகபட்சம், 40 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, அனைத்து தென்னை விவசாயிகளையும் திட்டத்தின் பயன் சென்றடையவில்லை. முறையான கணக்கெடுப்பு நடக்கவில்லை. எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என, தெளிவான அறிவிப்பு இல்லை.
திட்டம் அறிவிக்கப்பட்ட புதிதில் ஆளுங்கட்சியை சேர்ந்த சில விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. எத்தனை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது என்ற தெளிவான தகவல் இல்லை.
லோக்சபா ஓட்டுப்பதிவு தினத்தன்று, சில விவசாயிகளுக்கு, 16 ஆயிரம் ரூபாயும், சிலருக்கு, 32 ஆயிரம் ரூபாயும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதன்பின், இதுவரை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.
ஏற்கனவே கொடுத்த விண்ணப்பங்களுக்கே இன்னும் முழுமையாக நிவாரணம் வழங்கப்படவில்லை. நிதி ஒதுக்கப்பட்டால் மட்டுமே, விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தற்போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி, ஆனைமலை, பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்குப் பகுதி விவசாயிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், ஊட்டி மலர்க்கண்காட்சி பணிகளுக்காக தோட்டக்கலைத் துறை அலுவலர்களில் பெரும்பாலானவர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விவசாயிகள், விண்ணப்பங்களை ஒப்படைத்தாலும், ஆய்வு செய்யவும் ஆளில்லை. நிவாரண பட்டியல் தயாரிக்கவும் ஆளில்லாததால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

