/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவிநாசி ரோடு மேம்பால பணி தாமதமாவது ஏன்?
/
அவிநாசி ரோடு மேம்பால பணி தாமதமாவது ஏன்?
ADDED : ஏப் 05, 2025 11:23 PM
கோவை: கோவை, காந்திபுரத்தில் கட்டப்படும் நுாலகப் பணியை, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, ஆய்வு செய்து, 2026 ஜன., மாதத்துக்குள் பணிகளை முடிப்பது தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் ஆலோசித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையில் ரூ.300 கோடியில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்படுகிறது; 700 கார்கள், 450 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்படும். இரண்டு தளங்கள் வரை 'எஸ்கலேட்டர்', மற்ற தளங்களுக்கு செல்ல, நான்கு 'லிப்ட்' வசதி செய்யப்படும்.
விமான நிலைய ஆணையம், தீயணைப்பு துறை, நகர ஊரமைப்புத்துறை உள்ளிட்ட அரசு துறைகளிடம் சான்றுகள் பெற்றுள்ளோம். ஒரே நேரத்தில், 300 பேர் அமரும் வகையில் கலையரங்கம் கட்டப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.
பழமையான கட்டடங்களை பராமரிக்க, பொதுப்பணித்துறையில் தனிப்பிரிவு இருக்கிறது. புதிய கட்டடங்களை கட்டுவதுபோல், பழமையான கட்டடங்களை கட்ட முடியாது. சுண்ணாம்பு கலவை பயன்படுத்தி, பழமை மாறாமல் கட்ட வேண்டும். உறுதித்தன்மை முக்கியம்.
கோவை - அவிநாசி ரோடு மேம்பாலத்தில், ஹோப் காலேஜ் பகுதியில் ஓடுதளம் அமைக்க, 'கர்டர்'கள் தயாராக இருக்கின்றன. ரயில்வே அதிகாரிகள் மூன்று முறை கூட்டாய்வு செய்துள்ளனர்.
ரயில்வே தரப்பில் இன்னும் தடையின்மை சான்று வழங்கவில்லை. குறிப்பிட்ட தேதியில் சான்று கொடுத்திருந்தால், இம்மாதமே பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம்.
என்.ஓ.சி., கிடைத்து விட்டால், இரண்டு மாதம் போதும். இதுதொடர்பாக, வரும், 7ம் தேதி (நாளை) சென்னையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது.
நீலாம்பூர் வரை மேம்பாலம் கட்ட, இந்நிதியாண்டில் திட்ட அறிக்கை தயாரித்து, ஒப்பந்தம் கோரப்படும், விளாங்குறிச்சி ரோடு - தண்ணீர் பந்தல் மேம்பாலம், நீலிக்கோணாம்பாளையம் ரயில்வே மேம்பால பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

