/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒன்பது மாத நிலுவை ரூ.9 கோடி எங்கே? தற்காலிக துாய்மை பணியாளர்கள் கேள்வி
/
ஒன்பது மாத நிலுவை ரூ.9 கோடி எங்கே? தற்காலிக துாய்மை பணியாளர்கள் கேள்வி
ஒன்பது மாத நிலுவை ரூ.9 கோடி எங்கே? தற்காலிக துாய்மை பணியாளர்கள் கேள்வி
ஒன்பது மாத நிலுவை ரூ.9 கோடி எங்கே? தற்காலிக துாய்மை பணியாளர்கள் கேள்வி
ADDED : பிப் 15, 2024 06:44 AM

கோவை : தற்காலிக துாய்மை பணியாளர் ஒருவரிடம், தினமும் ரூ.71 என, ஒன்பது மாதங்களுக்கும் பிடித்தம் செய்யப்பட்ட, ரூ.19 ஆயிரம் நிலுவை தொகை எங்கே சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் தற்போது, 2,129 நிரந்தரம், 4,203 தற்காலிக துாய்மை பணியாளர்கள் உள்ளனர். தவிர, 795 கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் ரூ.721 தினக்கூலியை, 2022ம் ஆண்டு அறிவித்தது.
ஆனால், மாநகராட்சி நிர்வாகம் வழங்காததால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, கடந்தாண்டு ஜன., 1 முதல் ரூ.648 தினக்கூலி வழங்கப்படும் என, மாமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், வங்கி கணக்கில் ரூ.415 மட்டுமே 'கிரெடிட்' ஆனது, தொழிலாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முதலில், ரூ.648 சம்பளத்தில் இ.எஸ்.ஐ., - பி.எப்., உள்ளிட்டவை பிடித்தம் போக, ரூ.541 தினக்கூலி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, அடிப்படை சம்பளமான ரூ.567ல் இருந்து பிடித்தம் போக ரூ.486 மட்டுமே வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்த நிலையில், வெறும் ரூ.415 மட்டுமே செலுத்தப்படுவதாக தொழிலாளர்கள் புலம்பினர்.
மேலும், ரூ.486க்கும், ரூ.415க்கும் வித்தியாச தொகையான ரூ.71 பணியாளர் ஒருவரிடம் இருந்து பிடித்தம் என்பது எங்கே செல்கிறது என்ற கேள்வியை எழுப்பி வந்தனர்.
மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் வெடித்ததை அடுத்து, கடந்தாண்டு நவ., முதல் ரூ.486 தினக்கூலி வழங்கப்பட்டு வருகிறது.
துாய்மை பணியாளர்கள் வாழ்வுரிமையை, மீட்டெடுக்கும் சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் ஸ்டாலின் பிரபு கூறியதாவது:
கடந்தாண்டு நவ., முதல் தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு ரூ.486 முழு சம்பளம் வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு மாநகராட்சியில், 4,837 தற்காலிக பணியாளர்கள் இருந்தனர். இவர்களுக்கு கடந்தாண்டு ஜன., முதல் பணியாளர் ஒருவருக்கு ரூ.71 வீதம் மாதம் ரூ.2,130 என ஒன்பது மாதங்களுக்கும் சேர்த்து, 19 ஆயிரத்து, 170 ரூபாய் நிலுவை உள்ளது.
இப்படி, 4,837 பேருக்கும் கணக்கிட்டால் 9.27 கோடி ரூபாய் எங்கே சென்றது என்ற கேள்வி எழுகிறது. எனவே, நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இதுதொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

