/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மணிக்கணக்கில் பஸ் வருகைக்கு காத்திருப்பு! பூசாரிபாளையம் பகுதி மக்கள் புலம்பல்
/
மணிக்கணக்கில் பஸ் வருகைக்கு காத்திருப்பு! பூசாரிபாளையம் பகுதி மக்கள் புலம்பல்
மணிக்கணக்கில் பஸ் வருகைக்கு காத்திருப்பு! பூசாரிபாளையம் பகுதி மக்கள் புலம்பல்
மணிக்கணக்கில் பஸ் வருகைக்கு காத்திருப்பு! பூசாரிபாளையம் பகுதி மக்கள் புலம்பல்
UPDATED : டிச 15, 2025 05:51 AM
ADDED : டிச 15, 2025 05:46 AM

மாநகராட்சி மேற்கு மண்டலம், 74வது வார்டானது பூசாரிபாளையம், பனைமரத் துார், கோகுலம் காலனி, இந்திரா நகர், வேளாண் பல்கலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஜி.சி.டி., குடியிருப்பு, ஓம் சக்தி நகர், சவுடேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்டுள்ளது.
இப்பகுதிகளில் விளையாட்டு பூங்கா அமைத்துதருமாறு விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பூசாரிபாளையம் பஸ் ஸ்டாப் மோசமான நிலையில் காணப்படுகிறது. இங்கிருந்து தொண்டாமுத்துார், டவுன்ஹால் செல்வோருக்கு பஸ்கள் போதியளவில் இயக்கப்படுவதில்லை. காலை, மாலை 'பீக்' சமயத்தில், ஒரே நேரத்துக்கு இரண்டு, மூன்று பஸ்கள் வருகின்றன. மதிய நேரத்தில் மணிக்கணக்கில் காத்திருப்பதுடன், அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்ல முடிவதில்லை என புலம்புகின்றனர் பூசாரிபாளையம் பகுதி மக்கள்.
விளையாட இடம் இந்திரா நகர், கோகுலம் காலனி பகுதியில் விளையாட்டு மைதானம் எதுவும் இல்லை. எனவே, 3 கி.மீ., தொலைவில் உள்ள 'பை மெட்டல்' நகருக்கு விளையாட செல்கிறோம். இந்திரா நகரில் இருக்கும் சிறுவர் பூங்காபராமரிப்பின்றி உள்ளது. அதை பராமரித்தாலே வாலிபால் விளையாட பயன்படுத்திக்கொள்வோம். -கபிலன், கல்லுாரி மாணவர்.
மருத்துவ தேவை பூசாரிபாளையம் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், பி.என்., புதுார், கோகுலம் காலனி செல்ல வேண்டியுள்ளது. அவசர காலங்களில் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத்தர வேண்டும். -கலைச்செல்வி, இல்லத்தரசி.
ஜல்லியாக நாயக்கர் தோட்டம் இரண்டாவது குறுக்கு தெருவில் இரு மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட ரோட்டில் தண்ணீர் தேங்கினால் ஜல்லியாக வருகின்றன. இங்குள்ள சாக்கடை கழிவுகளை அகற்றினாலும், இரண்டு, மூன்று நாட்கள் கழித்தே துாய்மை பணியாளர்கள் சேகரிக்கின்றனர். அதற்குள் கோழிகள் பறித்து ரோட்டில் சிதறுகிறது. ஒரு நாள் கழித்தாவது எடுத்துவிட வேண்டும். -உமா, இல்லத்தரசி.
மோசமான கட்டடம்! கோகுலம் காலனி அடுத்து உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே உள்ள பம்ப் அறை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலே கான்கிரீட் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த அறை பயன்பாடற்று உள்ளது. இருப்பினும் இதை குப்பை சேகரிக்க சிலர் பயன்படுத்துகின்றனர். ஆபத்து ஏற்படும் முன் கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும். -நடராஜ், பந்தல் வேலை.
துர்நாற்றம் இந்திரா நகர் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அருகே குப்பையை கொட்டுகின்றனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் குழாயில் அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகள் இருக்கும் இடத்தில் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-கதிரவன், கூலி வேலை.

