/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரம்; கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி
/
தமிழக சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரம்; கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி
தமிழக சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரம்; கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி
தமிழக சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரம்; கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி
ADDED : டிச 27, 2025 06:31 AM

- நிருபர் குழு -:
கேரளா மாநிலத்தில், பறவை காய்ச்சல் பரவல் காரணமாக, மாநில எல்லையான, உடுமலை ஒன்பதாறு சோதனை சாவடியில் கால்நடைத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளா மாநிலம், கோட்டையம், ஆழப்புழா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பண்ணைகளில், பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநில எல்லைகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் 24 மணி நேரமும், சோதனை, கண்காணிப்பு மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், கேரளா மாநில எல்லையான, உடுமலை -- மூணாறு ரோட்டில் அமைந்துள்ள மாநில எல்லையான ஒன்பதாறு சோதனை சாவடியில், உடுமலை கோட்ட கால்நடைத்துறை சார்பில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கால்நடைத்துறை டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை கொண்ட குழு, 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்திலிருந்து, தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
மேலும், உயிருள்ள கோழிகள், கோழி இறைச்சி மற்றும் தீவனங்கள் கொண்டு வரும் வாகனங்கள் தமிழக எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு, திரும்ப அனுப்பி வைக்கப்படுகிறது. கண்காணிப்பு பணியை, உதவி இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் திருப்பூர் மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி பொள்ளாச்சி அருகே, நடுப்புணி, கோபாலாபுரம் சோதனைச் சாவடியில், கால்நடைத்துறை டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இப்பணியை கால்நடைத்துறை உதவி இயக்குனர் சக்ளாபாபு ஆய்வு செய்தார்.
கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக - கேரளா எல்லையில் வீரப்பகவுண்டன்புதுார், வடக்குகாடு, ஜமீன் காளியாபுரம், நடுப்புணி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், செமணாம்பதி உள்ளிட்ட, ஏழு சோதனைச்சாவடிகள் உள்ளன. இப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டாக்டர்கள், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர், கோபாலபுரம், நடுப்புணி வழியாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை பரிசோதனை செய்து, கிருமிநாசினி தெளித்த பின்னரே தமிழகத்துக்குள் அனுப்பப்படுகின்றன.
அதே போன்று, கோழி, முட்டை, தீவனம் ஏற்றிச் சென்ற வாகனங்கள் துாய்மைப்படுத்திய பின், தமிழகத்துக்குள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. துாய்மையின்றி வந்தால் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இவ்வாறு, கூறினர்.

