/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெற்றோர் கஷ்டத்தை உணர்ந்து படிங்க! மாணவர்களுக்கு அமைச்சர் மகேஷ் அட்வைஸ்
/
பெற்றோர் கஷ்டத்தை உணர்ந்து படிங்க! மாணவர்களுக்கு அமைச்சர் மகேஷ் அட்வைஸ்
பெற்றோர் கஷ்டத்தை உணர்ந்து படிங்க! மாணவர்களுக்கு அமைச்சர் மகேஷ் அட்வைஸ்
பெற்றோர் கஷ்டத்தை உணர்ந்து படிங்க! மாணவர்களுக்கு அமைச்சர் மகேஷ் அட்வைஸ்
ADDED : நவ 12, 2024 09:14 AM

பொள்ளாச்சி; 'மற்றவர் கூறியதற்காக படிக்காமல், உங்களுக்கு பிடித்ததை படியுங்கள்; பெற்றோர் கஷ்டத்தை உணர்ந்து படிக்கணும்,'' என, மாணவர்களுக்கு, கல்வித்துறை அமைச்சர், மகேஷ் அறிவுரை வழங்கினார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை வி.ஆர்.டி., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் ஆனைமலை மக்கள் நல அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், கலையரங்கத்தை திறந்து வைத்து பேசியதாவது:
பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள இப்பள்ளிக்கு, நான்கு வகுப்பறைகள் கட்ட, 95 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது படிக்கின்ற வயதில், மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின், படியுங்கள்; அதில் கவனம் செலுத்துங்கள்; எந்த தடை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.
இரண்டாம் பெற்றோரான ஆசிரியர்கள் சொல்வதை கேட்க வேண்டும். பெற்றோர், குழந்தைகளை, மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசக்கூடாது.
நமது குழந்தைகளிடம் மறைந்துள்ள திறமை என்ன என்பது கண்டறிவது பெற்றோர், ஆசிரியர்களுக்கு கடமையாகும்.
அனைத்து குழந்தைகளும், 100 மதிப்பெண் பெற முடியாது; குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களிடம் திறமைகள் மறைந்து கிடக்கின்றன.
மாணவர்கள் படிக்கும் போது கூச்சம், பயமின்றி சந்தேகம் இருந்தால் வகுப்பறையில் ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற வேண்டும். ஒவ்வொரு மாணவரும், ஆசிரியராக மாற வேண்டும்.
மற்றவர்கள் சொல்லியதை படிக்காமல், பிடித்ததை படித்தால் மேலே வர முடியும். வெறும் மதிப்பெண் மட்டும் மதிப்பீடு செய்யாது; நல்ல ஒழுக்கமான பிள்ளைகளாக இருக்க வேண்டும். பெற்றோரின் கஷ்டங்களை உணர்ந்து படிக்க வேண்டும்.
படிப்போடு விளையாட்டிலும் கவனம் செலுத்தி, திறமைகளை மேம்படுத்த வேண்டும். துணை முதல்வர், விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
மைதானமும் ஒரு வகுப்பறை தான் என்பதை மனதில் கொண்டு, தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

