/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்ப்யூட்டர் இயக்க மாணவர்களுக்கு பயிற்சி
/
கம்ப்யூட்டர் இயக்க மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : செப் 19, 2025 09:23 PM
கோவை; அரசு பள்ளி மாணவர்களின் டிஜிட்டல் தொழில்நுட்பத் திறனை வளர்க்க, அறிமுகப்படுத்திய, 'டிஎன் ஸ்பார்க்' திட்டத்தில், கம்ப்யூட்டரை மாணவர்கள் எளிதாக இயக்கும் அடிப்படை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது
கம்ப்யூட்டர், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த திறன்களை வளர்க்க, 'டிஎன் ஸ்பார்க்' என்ற திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஹைடெக் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் உள்ள மற்றும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 'டிஎன் ஸ்பார்க்' பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அவற்றை கற்பதற்கு முன், மாணவர்களுக்குக் கம்ப்யூட்டர் எளிதாக இயக்கும் அடிப்படை பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மவுஸ், கீபோர்டு ஆகியவற்றை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும், மென்பொருள் விளையாட்டுகள் (சாப்ட்வேர் கேம்ஸ்) மூலமாகவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பான காணொலிகள், மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளில் காண்பிக்கப்படும்.
இப்பயிற்சி, மாணவர்கள் கம்ப்யூட்டரை தயக்கமின்றி இயக்கவும், 'டிஎன் ஸ்பார்க்' பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சிகளை எளிதாகக் கற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும், என, கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.