/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
12 எஸ்.ஐ.,க்களுக்கு பயிற்சி நிறைவு விழா
/
12 எஸ்.ஐ.,க்களுக்கு பயிற்சி நிறைவு விழா
ADDED : பிப் 20, 2024 04:45 AM

பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லுாரியில், பயிற்சி முடித்த 12 எஸ்.ஐ.,க்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடந்தது.
அகில இந்திய அளவில், சி.ஆர்.பி.எப்.,ன் பல்வேறு பணிகளுக்காக தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு, இங்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சி நிறைவு பெறும் வீரர்கள், உடனடியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணி அமர்த்தப்படுவர். இங்கு, இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, 45 வயது பூர்த்தியாகாத நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, 6 வார கால அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.
ஓய்வு பெற்ற ஒன்பது ராணுவ வீரர்கள், இரண்டு கப்பல் படை வீரர்கள், ஒரு விமானப்படை வீரர் என மொத்தம், 12 பேர், 6 வாரமாக பயிற்சி பெற்றனர். பயிற்சி நிறைவு ஒட்டி, அவர்களுக்கு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
பயிற்சி நிறைவு விழா, சி.ஆர்.பி.எப்., வளாகத்தில் நடந்தது. பயிற்சி கல்லூரி முதல்வர் அஜய் பரதன் தலைமை வகித்தார். பயிற்சி நிறைவு பெற்ற வீரர்கள் தேசியக்கொடி மற்றும் சி.ஆர்.பி.எப்., கொடி முன் உறுதிமொழி ஏற்றனர்.
சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லுாரி முதல்வர் அஜய் பரதன் பேசுகையில், ''ஏற்கனவே ராணுவத்தில் பணிபுரிந்த நீங்கள், அதே அனுபவத்தோடு, நாட்டின் நலனுக்காகவும், நமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை போற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரிய வேண்டும்,'' என்றார்.

