/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை நார் தொழிலை மேம்படுத்த... எதிர்பார்ப்பு! கேரளாவை போன்று மானியம் வழங்கணும்
/
தென்னை நார் தொழிலை மேம்படுத்த... எதிர்பார்ப்பு! கேரளாவை போன்று மானியம் வழங்கணும்
தென்னை நார் தொழிலை மேம்படுத்த... எதிர்பார்ப்பு! கேரளாவை போன்று மானியம் வழங்கணும்
தென்னை நார் தொழிலை மேம்படுத்த... எதிர்பார்ப்பு! கேரளாவை போன்று மானியம் வழங்கணும்
ADDED : டிச 23, 2025 06:55 AM

பொள்ளாச்சி: 'விலை சரிவால், 75 சதவீத தொழிற்சாலைகள், கயிறு உற்பத்தியை நிறுத்தியுள்ளன. கயிறு தொழிலை மேம்படுத்த, கேரளாவை போன்று மானியம் வழங்கி அரசு உதவினால், பயனாக இருக்கும்,' என கயிறு உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை பிரதான விவசாயமாக உள்ளது. இங்கு இருந்து, இளநீர், தேங்காய் உள்ளிட்டவை வெளியூர்கள், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
தென்னை சார்ந்த நார் உற்பத்தி மற்றும் கயிறு உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்று வருகின்றன.இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள், கேரளாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு இருந்து, 'மேட்' தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், இத்தொழிலில், கயிறுக்கு உரிய விலை கிடைக்காததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கயிறு உற்பத்தியாளர் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.
கயிறு உற்பத்தியாளர் நலச்சங்க செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கொற்றைவேல் ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. தினமும், 2 கோடி கிலோ கயிறு உற்பத்தி செய்து கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. கேரளா மாநிலத்தில் இருந்து, கயிறு மேட் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கயிறு விலை சரிந்து வருவதால் பாதிப்புக்குள்ளாகி வருகிறோம். மேலும், அமெரிக்கா வரி விதிப்பு காரணமாக விலை சரிந்துள்ளது. கிலோ, 60 ரூபாய்க்கு விற்பனை செய்த கயிறு, தற்போது, 39 ரூபாயாக சரிந்துள்ளது.
காய்ந்த மட்டையில் உற்பத்தி செய்யப்படும், 'பிரவுன்' கயிறு, 35 ரூபாயாகவும், பச்சை மட்டையில் உற்பத்தி செய்யப்படும் 'ஒயிட்' கயிறு, 39 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த, மூன்று மாதங்களாக விலை சரிவால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர், வெளியூர் தொழிலாளர்களுக்கு அதிக விடுமுறை விடுவதால் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கும், வேறு வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.
விலை குறைவால், 75 சதவீத மில்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால், தொழில் நலிவடைந்து வருகிறது.
கேரள மாநிலத்தில், கூட்டுறவு சொசைட்டி உள்ளதால், கயிறு உற்பத்தி செய்வோர், நேரடியாக விற்று பயன்பெற முடியும். ஆனால், தமிழகத்தில் சொசைட்டி இல்லை. இதனால், இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. உற்பத்தியாளர்களுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. கேரளாவை போன்று சொசைட்டி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
சிறு,குறு, நடுத்தர அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கயிறு தொழில் மின்கட்டணம் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும். மின்சார மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
கேரளாவில் கயிறு தொழிலுக்கு மானியம் வழங்குவதால், அவர்கள், மூலப்பொருட்கள் அதிக விலை கொடுத்து தமிழகத்தில் எடுக்கின்றனர். அவர்களை போன்று தமிழகத்திலும் மானியம் வழங்காததால், நஷ்டம் ஏற்படுகிறது.
நலிவடையும் நிலையில் உள்ள இத்தொழிலை மேம்படுத்த வேண்டும்.அரசு உரிய கவனம் செலுத்தி, எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால் பயனாக இருக்கும். இவ்வாறு, கூறினர்.

