/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுதந்திர போராட்ட வீரருக்கு உருவச்சிலை; நகராட்சியில் அமைக்க பணி தீவிரம்
/
சுதந்திர போராட்ட வீரருக்கு உருவச்சிலை; நகராட்சியில் அமைக்க பணி தீவிரம்
சுதந்திர போராட்ட வீரருக்கு உருவச்சிலை; நகராட்சியில் அமைக்க பணி தீவிரம்
சுதந்திர போராட்ட வீரருக்கு உருவச்சிலை; நகராட்சியில் அமைக்க பணி தீவிரம்
ADDED : மார் 20, 2024 09:56 PM

உடுமலை : சுதந்திர போராட்ட வீரர் தளி எத்தலப்பரின் உருவச்சிலை, நகராட்சி அலுவலக வளாகத்தில், அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது; அவ்விடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கவும், நகராட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
உடுமலை அருகே தளியை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்த எத்தலப்பர் வம்சாவளியினர், நாட்டின் சுதந்திரத்துக்காக, ஆங்கிலேயரை எதிர்த்து போராடினர்.
துாது வந்த ஆங்கிலேய வீரனை துாக்கிலிட்டு, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தவர்கள் எத்தலப்பர் வம்சாவளியினர். அதன்பின்னர் நடந்த போரில், தளி பாளையம் ஆங்கிலேயர்களால், அழிக்கப்பட்டது. இந்த சுதந்திர போராட்ட வரலாறு குறித்து இளைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில், மணி மண்டபம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.
அவர் தலைமையிலான குழுவினர், மணிமண்டபம் கட்டுவதற்காக, திருமூர்த்திமலையில், இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், தளி எத்தலப்பருக்கு, திருமூர்த்திமலையில், மணிமண்டபம் கட்டவும், நகராட்சி அலுவலக வளாகத்தில், உருவச்சிலை அமைக்கவும், அரசாணை வெளியிடப்பட்டு, ரூ.2 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த, 2022ல், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், திருமூர்த்திமலையில் மணிமண்டப கட்டுமான பணிகள் துவங்கியது. இந்த மண்டபத்தில் தளி பாளையம் மற்றும் சுதந்திர போராட்ட நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற உள்ளது.
இதே போல், நகராட்சி அலுவலகத்தில், எத்தலப்பர் உருவச்சிலை அமைக்க, பழைய அலுவலக கட்டடம் முன், இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளது.
இதில், பீடம் அமைத்து, முழு உருவச்சிலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில், செம்மொழி பூங்கா அமைத்து, பராமரிக்கவும், நகராட்சி நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர். அதற்கான பணிகளும் விரைவில் துவங்க உள்ளது.
உடுமலையின் முக்கிய வரலாற்று போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில், மணிமண்டபம் மற்றும் உருவச்சிலை அமைக்கப்பட்டு வருவதற்கு அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

