/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடுபட்ட தொழிலாளர்களை பி.எப்.ல் சேர்க்க சிறப்பு முகாம்
/
விடுபட்ட தொழிலாளர்களை பி.எப்.ல் சேர்க்க சிறப்பு முகாம்
விடுபட்ட தொழிலாளர்களை பி.எப்.ல் சேர்க்க சிறப்பு முகாம்
விடுபட்ட தொழிலாளர்களை பி.எப்.ல் சேர்க்க சிறப்பு முகாம்
ADDED : டிச 20, 2025 05:35 AM

கோவை: விடுபட்ட தொழிலாளர்களை, வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்க்க, 2026 ஏப்ரல் 30 வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கோவை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (பி.எப்.,) கோவை மண்டல முதன்மை கமிஷனர் பிரசாந்த் கூறியதாவது:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில், பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் இதுவரை பதிவு செய்யப்படாத தகுதியான ஊழியர்களையும், சுயமாக பதிவு செய்ய, சிறப்பு ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட தொழிலாளர்களை வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.,) திட்டத்தில் சேர்க்க சிறப்பு முகாம், நவம்பர் 1 முதல் துவங்கிய நிலையில், 2026 ஏப்ரல் 30 வரை நடத்தப்படுகிறது. முகாம் வாயிலாக தகுதியான தொழிலாளர்களை தாமாக சேர்க்கும் வசதி, நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த கால தவறுகளுக்கு குறைந்தபட்ச அபராதத்துடன், நிறுவன முதலாளிகள் தங்கள் நிறுவனங்களை முறைப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சிறப்பு முகாம், 2017 ஜூலை 1 முதல் 31 அக்., 2025 வரை பணியில் சேர்ந்த, இ.பி.எப்.,க்கு தகுதியானவராக இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால், இதில் சேர்க்கப்படாத தொழிலாளர்களை இலக்காக கொண்டுள்ளது.
இத்தகைய விடுபட்ட தொழிலாளர்களை, இ.பி.எப்., போர்ட்டல் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே சேர்க்க வேண்டும். ஒவ்வொரு ஊழியருக்கும், 'UMANG App' வழியாக முக அடையாள தொழில்நுட்பத்தின் அடிப்படையில், உறுப்பினர் எண் (UAN) உருவாக்கி போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.
ஊழியர்களின் பங்களிப்பு தொகை முன்பே பிடித்தம் செய்யப்படாமல் இருந்தால், அந்த பங்களிப்புக்கு முற்றிலும் விலக்கு அளிக்கப்படும். நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் பங்கை மட்டும் செலுத்தினால் போதும். நிறுவனங்கள் தாமத கட்டணமாக ரூ.100 செலுத்தினால் போதும்.
இந்த சிறப்பு முகாம், விடுபட்ட தொழிலாளர்களை, இ.பி.எப்., திட்டத்தில் இணைத்து, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரு முக்கிய முயற்சி.
நிறுவனத்தை சேர்ந்தவர்கள், தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும், இத்திட்டத்தில் இணைக்க வேண்டும். www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் தகவல் பெறலாம். விபரங்களுக்கு, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

