/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்.. அடுத்தது! . கூட்டமைப்பு உருவாக்கி சூளுரை
/
துாய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்.. அடுத்தது! . கூட்டமைப்பு உருவாக்கி சூளுரை
துாய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்.. அடுத்தது! . கூட்டமைப்பு உருவாக்கி சூளுரை
துாய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்.. அடுத்தது! . கூட்டமைப்பு உருவாக்கி சூளுரை
ADDED : டிச 31, 2025 05:05 AM

கோவை, துாய்மை பணியாளர்களின் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் விதமாக, ஆறு தொழிற்சங்கங்கள் அடங்கிய, 'வந்தே மாதரம்' என்ற கூட்டமைப்பு உருவாகியுள்ளது. அரசு தீர்வு வழங்காவிட்டால், ஜனவரி இரண்டாம் வாரம் முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதிக்க, கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில், 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 1,900 நிரந்தரம், 910 கொசு ஒழிப்பு (டி.பி.சி.,) பணியாளர்கள், 525 ஒப்பந்த டிரைவர்களும் உள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு குப்பை சேகரிக்கும் பணி, ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இது, பணி நிரந்தரம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தற்காலிக துாய்மை பணியாளர்களிடம் ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. மற்றொரு புறம், மாவட்ட நிர்வாகம் உயர்த்தி அறிவித்த ரூ.721 தினக்கூலியை வழங்குமாறு, 2022 முதல் போராடியும் தீர்வு கிடைத்தபாடில்லை.
இது போன்ற நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு காண, பாரதிய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் துாய்மை பணியாளர் பிரிவு, டாக்டர் அம்பேத்கர் மாநில மாநகராட்சி மற்றும் நகராட்சி துாய்மை பணியாளர் சங்கம் உட்பட ஆறு சங்கங்கள் அடங்கிய, 'வந்தே மாதரம்' கூட்டமைப்பை, துாய்மை பணியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பாரதிய சங்க பொதுச்செயலாளர் ஸ்டாலின் பிரபு கூறியதாவது:
தற்காலிக துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக, முதல்வர் ஸ்டாலின் சட்டசபை தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்தார். இவர்கள் 2010ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் குப்பை சேகரிப்பு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது பெரும் ஏமாற்றம் தந்துள்ளது.
எங்களது பிரதான கோரிக்கை, பணி நிரந்தரம். மாவட்ட நிர்வாகம் அறிவித்த ரூ.721 தினக்கூலியை வழங்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவே, 'வந்தே மாதரம்' கூட்டமைப்பு உருவாக்கியுள்ளோம். இந்த முறை தீர்வு கிடைக்காமல் பின்வாங்க போவதில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.
குப்பை குப்பைதான்! சென்னையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, சம்பளம் உயர்த்தி வழங்கப்படுகிறது. அங்கும் குப்பைதான் சேகரிக்கின்றனர்.
இங்கும் குப்பைதான் சேகரிக்கிறோம். இப்படியிருக்க தினக்கூலியில் ஏன் இந்த பாகுபாடு? மு றையாக ஜன., இரண்டாம் வாரத்தில் 'ஸ்டிரைக் நோட்டீஸ்' வழங்கி தேர்தலுக்கு முன், சட்ட ரீதியாக போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்கின்றனர், துாய்மை பணியாளர்கள்.

