/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா கல்லுாரி 'சாம்பியன்!' இரண்டாம் பரிசை தட்டியது வி.எல்.பி., கல்லுாரி அணி
/
ராமகிருஷ்ணா கல்லுாரி 'சாம்பியன்!' இரண்டாம் பரிசை தட்டியது வி.எல்.பி., கல்லுாரி அணி
ராமகிருஷ்ணா கல்லுாரி 'சாம்பியன்!' இரண்டாம் பரிசை தட்டியது வி.எல்.பி., கல்லுாரி அணி
ராமகிருஷ்ணா கல்லுாரி 'சாம்பியன்!' இரண்டாம் பரிசை தட்டியது வி.எல்.பி., கல்லுாரி அணி
ADDED : நவ 29, 2024 11:57 PM

கல்லுாரி மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் இறுதிப்போட்டியில் துடிப்புடன் விளையாடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி 'சாம்பியன்ஷிப்' வென்றது.
கோவை விழாவின், 17வது பதிப்பை முன்னிட்டு 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'லைகா கோவை கிங்ஸ்' சார்பில் 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி கடந்த, 22ம் தேதி துவங்கியது. இதில், 32 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுக்களை அடுத்து நேற்று பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் இறுதிப்போட்டி இடம்பெற்றது. முன்னதாக காலையில், அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரிக்கும், என்.ஜி.எம்., கல்லுாரிக்கும் இடையே மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டி நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த கே.பி.ஆர்., அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 134 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய, என்.ஜி.எம்., அணியினர், 13.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 98 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதில், 58 பந்துகளில், 82 ரன்கள் எடுத்ததுடன், 4 ஓவரில், 4 விக்கெட்கள் வீழ்த்திய கே.பி.ஆர்., வீரர் அருண்குமாருக்கு, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார், மக்கள் தொடர்பு மேலாளர் பிரகதீஸ்வரன் ஆகியோர் ஆட்ட நாயகன் விருது வழங்கினர்.
தொடர்ந்து நடந்த இறுதிப்போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியும், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த வி.எல்.பி., அணியினர், 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 109 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய, ராமகிருஷ்ணா அணியினர், 17.2 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 110 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடினர். 54 பந்துகளில், 60 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்த வீரர் வினய் சுப்ரமணியனிற்கு ஆட்ட நாயகன் விருதினை சுப்ரீம் மொபைல்ஸ் சேர்மன் ராதாகிருஷ்ணன் வழங்கினார். 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் இறுதிப்போட்டியானது 'தினமலர்' இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பரிசளிப்பு விழா!
முதல் பரிசு வென்ற ராமகிருஷ்ணா அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் டிராபியை 'லைகா கோவை கிங்ஸ்' தலைவர் ஸ்ரீஹரி மனோகர், உதவி பயிற்சியாளர் சுரேஷ்குமார், கோவை விழா சேர்மன் அருண் செந்தில்நாதன், இணை தலைவர் சவுமியா காயத்ரி, இணை தலைவர் சரிதா, 'தினமலர்' நாளிதழ் துணைப் பொது மேலாளர் சுதர்சன் ஆகியோர் வழங்கினர்.
இரண்டாம் இடம் பிடித்த வி.எல்.பி., ஜானகியம்மாள் அணிக்கு எஸ்.எஸ்.வி.எம்., கல்விக்குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை, அறங்காவலர் மோகன்தாஸ், 'தினமலர்' நாளிதழ் விற்பனை பிரிவு மேலாளர் ஐயப்பன் ஆகியோர் ரூ.25 ஆயிரம் மற்றும் டிராபியை வழங்கினர்.
மூன்றாம் இடம் பிடித்த கே.பி.ஆர்., அணிக்கு, ரூ.15 ஆயிரம் மற்றும் டிராபியை இந்துஸ்தான் கல்வி குழும இயக்குனர் சதீஸ் வழங்கினார். நான்காம் இடம் பிடித்த என்.ஜி.எம்., அணிக்கு, பி.எஸ்.ஜி., மருத்துவக்கல்லுாரி இயக்குனர் புவனேஸ்வரன் ரூ.10 ஆயிரம் மற்றும் டிராபியை வழங்கினார்.
கே.பி.ஆர்., அணி வீரர் அருண்குமாருக்கு 'பெஸ்ட் பேட்ஸ்மேன்' மற்றும் தொடர் நாயகன் விருதினை, வால்ரஸ் நிறுவன உரிமையாளர் வால்ரஸ் டேவிட் வழங்கினார். வி.எல்.பி., அணி வீரர் கண்ணனிற்கு சுப்ரீம் மொபைல்ஸ் சேர்மன் ராதாகிருஷ்ணன் 'பெஸ்ட் பவுலர்' விருதுவழங்கினார்.
நெட் பவுலர்கள்
வி.எல்.பி., வீரர்கள் கண்ணன், ஆனந்தகுமார் மற்றும் என்.ஜி.எம்., வீரர் விக்னேஷ்குமார் ஆகியோர் 'லைகா கோவை கிங்ஸ்' அணியால் 'நெட் பவுலர்'களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கரம் கோர்த்தவை!
'தினமலர்' நாளிதழுடன் எஸ்.எஸ்.வி.எம்., நிறுவனங்கள், இந்துஸ்தான் நிறுவனங்கள், 'வால்ரஸ்' நிறுவனம், சுப்ரீம் மொபைல்ஸ் ஆகியன இணைந்து போட்டிகளை நடத்தின.

