/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லங்கா கார்னரில் குழாய் பதிக்கும் பணி துவங்கியது கான்கிரீட் பாக்ஸ் மழைநீர் வடிகால் அமைக்க முடிவு
/
லங்கா கார்னரில் குழாய் பதிக்கும் பணி துவங்கியது கான்கிரீட் பாக்ஸ் மழைநீர் வடிகால் அமைக்க முடிவு
லங்கா கார்னரில் குழாய் பதிக்கும் பணி துவங்கியது கான்கிரீட் பாக்ஸ் மழைநீர் வடிகால் அமைக்க முடிவு
லங்கா கார்னரில் குழாய் பதிக்கும் பணி துவங்கியது கான்கிரீட் பாக்ஸ் மழைநீர் வடிகால் அமைக்க முடிவு
ADDED : டிச 28, 2025 05:05 AM

கோவை: கோவை மாநகராட்சி 60 வார்டு பகுதிகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தில் இறுதிக்கட்ட பணிகளும், விடுபட்ட வேலைகளும் செய்யப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்று திருச்சி ரோட்டை தோண்டி, குழாய் பதிக்கப்பட்டிருக்கிறது. சுங்கம் சந்திப்பில் 'ப' வடிவில் குழாய் பதிக்கப்பட்டது. வால்வு பகுதி மட்டும் ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒலம்பஸ் 80 அடி ரோடு, கோத்தாரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன சின்ன வேலைகள் நடந்து வருகின்றன.
லங்கா கார்னர் பகுதியில் ஸ்டேட் பாங்க் ரோட்டில் இருந்து இடது புறம் திரும்பி, அரசு மருத்துவமனை முதல் நுழைவாயில் வரை குழாய் பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. ரோட்டை துளையிட்டு, பொக்லைன் வாகனங்களால் தோண்டப்படுகிறது. இதேபோல், டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டியுள்ள புது தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் லங்கா கார்னரில் இருந்து இணைப்பு குழாய் பதிக்கப்படுகிறது.
கான்கிரீஸ் பாக்ஸ் வடிகால்
ஸ்டேட் பாங்க் ரோட்டில் இருந்து வரும் மழை நீர் வடிகால் வாலாங்குளத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. ரோட்டில் வழிந்து வரும் மழை நீர் கால்வாயில் கீழிறங்கும் வகையில் ரோட்டில் இரும்பு சல்லடை பதிக்கப்பட்டிருந்தது. தற்போது குடிநீர் குழாய் பதிக்க தோண்டியபோது, குழிக்குள் கழிவு நீர் தேங்கியது. அதனால், 1.5 மீட்டர் ஆழத்தில் 2.7 மீட்டர் அகலத்தில் திருச்சி ரோட்டின் குறுக்கே கடந்து வாலாங்குளத்துக்கு மழை நீர் செல்லும் வகையில் ரெடிமெடு கான்கிரீட் பாக்ஸ் மழை நீர் வடிகால் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இவ்விரு வேலைகளையும் மேற்கொள்ள பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''அடுத்த கட்டமாக, புலியகுளம் மற்றும் நஞ்சுண்டாபுரம் தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் ராமநாதபுரம் சந்திப்பில் ரோட்டின் இருபுறமும் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும். ரோட்டுக்கு கீழே வாலாங்குளத்தின் உபரி நீர் செல்கிறது. பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுக்கு கீழே பதிக்க வேண்டும் என்பதால் கவனமாக கையாள வேண்டும். ஒரு வாரத்துக்குள் முடித்து, சோதனை முறையில் 'பம்ப்' செய்து பார்க்கப்படும்,'' என்றார்.
முன்னறிவிப்பு இல்லை
வாகன ஓட்டிகள் அவதி
லங்கா கார்னரில் குழாய் பதிக்கும் பணி நடப்பதால், ஸ்டேட் பாங்க் ரோட்டில் வந்த வாகன ஓட்டிகள் திருச்சி ரோடு மற்றும் டவுன்ஹால் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து முன்னறிப்பு செய்யவில்லை. அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. ஒரு பெண் போலீசார் நின்றிருந்து, வாகனங்களை திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். 'யூ டேர்ன்' அடித்து செஞ்சிலுவை சங்கம் சென்று, அரசு கலை கல்லுாரி ரோடு வழியாக திருச்சி ரோட்டை சென்றடைந்தனர். டவுன்ஹாலுக்கு அவிநாசி ரோடு மேம்பாலம் வழியாக சென்றனர்.

