/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் பாதசாரிகளுக்கு பாதுகாப்பில்லை
/
ரோட்டில் பாதசாரிகளுக்கு பாதுகாப்பில்லை
ADDED : நவ 04, 2024 08:47 PM
பொள்ளாச்சி,; நடைபாதையில், ரோட்டோரக் கடைகள் காரணமாக, மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் நடந்து செல்கின்றனர்.
பொள்ளாச்சி நகரில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகள், விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய தார் சாலை அமைத்து, மழைநீர் வடிகால் மட்டுமின்றி பாதசாரிகள் விபத்தின்றி நடந்து செல்ல, இருபுறமும், 'பேவர் பிளாக்' நடைபாதை அமைக்கப்பட்டது.
பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, வால்பாறை ரோடு உள்ளிட்ட வழித்தடங்களில், 'பேவர் பிளாக்' நடைபாதையை அமைக்கப்பட்டும், ஆக்கிரமிப்பு கடைகள் காரணமாக, மக்கள், ரோட்டில் நடந்து செல்கின்றனர்.
நடைபாதை ஒட்டி, டூ வீலர்களும் நிறுத்தி வைக்கப்படுவதால், ரோட்டிலேயே மக்கள் நடந்து செல்கின்றனர். இதனால், பலர், விபத்தில் சிக்குகின்றனர். சீரான போக்குவரத்தும் தடைபடுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது: புது பஸ் ஸ்டாண்ட், தலைமை தபால் அலுவலகம், அரசு மருத்துவனை ஒட்டிய ரோட்டில், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடிவதில்லை. அங்கு, தள்ளுவண்டிக் கடைகள், சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், நிரந்தர கடைக்காரர்களும் விளம்பரப் பலகை வைத்தும், நடைபாதையை தாண்டி கடையில் உள்ள பொருட்களை விரிவுபடுத்தியும் வைத்துள்ளனர். சில நேரம், ரோட்டில் செல்வதற்கு இடையூறு ஏற்படுவதால், போக்குவரத்து நெரிசலில் பலரும் சிக்கித் தவிக்கின்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற, மக்கள் பாதுகாப்புடன் நடந்து செல்ல, நகராட்சி, நெடுஞ்சாலை மற்றும் போலீசார் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

