/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீட்டிப்பு கேட்டது பழநிக்கு; போகப்போவது பாலக்காடுக்கு! எம்.பி.,க்கள் கோரிக்கைகளை மதிக்காத தெற்கு ரயில்வே அதிகாரிகள்
/
நீட்டிப்பு கேட்டது பழநிக்கு; போகப்போவது பாலக்காடுக்கு! எம்.பி.,க்கள் கோரிக்கைகளை மதிக்காத தெற்கு ரயில்வே அதிகாரிகள்
நீட்டிப்பு கேட்டது பழநிக்கு; போகப்போவது பாலக்காடுக்கு! எம்.பி.,க்கள் கோரிக்கைகளை மதிக்காத தெற்கு ரயில்வே அதிகாரிகள்
நீட்டிப்பு கேட்டது பழநிக்கு; போகப்போவது பாலக்காடுக்கு! எம்.பி.,க்கள் கோரிக்கைகளை மதிக்காத தெற்கு ரயில்வே அதிகாரிகள்
ADDED : மார் 15, 2024 08:07 PM
-நமது நிருபர்-
கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை, பழநி வரை நீட்டிக்க வேண்டுமென்று, எம்.பி.,க்கள் உட்பட பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதை பாலக்காடுக்கு நீட்டிக்கப்போவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, திருவனந்தபுரம் நகரங்களை விட, கோவைக்கு மிக அருகில் இருப்பது, பெங்களூரு தான். இதனால் கோவைக்கும், பெங்களூருக்கும் இடையில், நீண்ட காலமாகவே சமூகம், தொழில் மற்றும் வர்த்தகம் சார்ந்த தொடர்புகள் அதிகம்.
கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், வணிகம் ஆகிய காரணங்களுக்காக, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தினமும் பல ஆயிரம் பேர் பெங்களூரு செல்கின்றனர்.
ஆனால், விமானம், ரயில் மற்றும் பஸ் வசதிகள் இல்லாததால் தான், சென்னைக்குச் செல்லும் ஆம்னி பஸ்களை விட, கோவையிலிருந்து பெங்களூரு செல்லும் ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
கோவையிலிருந்து பெங்களூருக்கு, வந்தே பாரத் ரயில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதும் இதனால் தான். அதற்கு முன்பே, கோவை-பெங்களூரு இடையே டபுள் டெக்கர் ஏ.சி.,ரயிலான உதய் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலில், பயணியருக்கான வசதி குறைவு என்ற குறை இருந்தாலும், கோவையிலிருந்து இந்த ரயிலில் கூட்டத்துக்கு, என்றுமே குறை இருந்ததில்லை.
இந்த ரயிலில், கடந்த பிப்., 15லிருந்து கூடுதலாக ஒரு ஏ.சி., வகுப்புப் பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது; இதனால், மேலும் 100 ஏ.சி., சேர் கார் டிக்கெட்கள், கூடுதலாகக் கிடைத்துள்ளன.
இதற்கேற்ப, இந்த ரயிலுக்கும், சென்னை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் இடையே, 'ரேக் ஷேரிங் அரேஞ்ச்மென்ட்' எனப்படும், ரயில் பெட்டிகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
இதனால், இங்கிருந்து பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ், சென்னை செல்கிறது; சென்னையிலிருந்து பெங்களூரு வரும் ரயில், கோவை வருகிறது.
இந்த ரயிலில், சாதாரண வகுப்புப் பெட்டிகள் இரண்டு கூடுதலாக இணைக்க வேண்டுமென்று, பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்த நிலையில், ஏ.சி., சேர் கார் பெட்டி ஒன்று மட்டும் கூட்டப்பட்டுள்ளது.
இந்த ரயிலை, பொள்ளாச்சி வழியாக பாலக்காட்டுக்கு நீட்டிக்க முடிவு செய்து, அதற்கான ஆய்வுகளும் நடந்து முடிந்தன. இந்நிலையில், பாலக்காட்டுக்குப் பதிலாக, பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழநி வரை, இந்த ரயிலை நீட்டிக்க வேண்டுமென்று, பொள்ளாச்சி, திண்டுக்கல் எம்.பி.,க்கள், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
பொள்ளாச்சி, உடுமலை, பழநி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பெங்களூருவில் படிக்கும் மாணவர்கள், ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் பல ஆயிரம் பேருக்கும் உதவியாக இருக்குமென்று, அதில் குறிப்பிட்டிருந்தனர். இதே கருத்தை, பல்வேறு ரயில் பயணியர் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
இவை எதையும் மதிக்காமல், வாளையார் வழியாக இந்த ரயிலை, பாலக்காடு வரை நீட்டிக்க முயற்சி நடப்பதாகத் தகவல் பரவி வருகிறது. தெற்கு ரயில்வே அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு, இப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஏற்கனவே, கோவை-பெங்களூரு இன்டர்சிட்டி ரயிலை, எர்ணாகுளத்துக்கு நீட்டித்ததில், கோவைக்கான ஒதுக்கீடு பெருமளவில் குறைந்தது.
இப்போது இந்த ரயிலையும் பாலக்காடுக்கு நீட்டித்தால், கோவை உள்ளிட்ட தமிழகப் பகுதி மக்களுக்கு ஒதுக்கீடு குறையும்.
திட்டமிட்டே இதை நகர்த்திச் செல்ல முற்படும், தெற்கு ரயில்வே அதிகாரிகளின் முயற்சியை, பா.ஜ., உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து முறியடிக்க வேண்டுமென்பதே, கோவை மக்களின் எதிர்பார்ப்பு.

