/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்திபுரம் பாலத்தில் 2 இறங்குதளங்கள் அமைப்பதில்அதிகாரிகள் கூட்டுச்சதி; அரசு அனுமதி அதோ கதி!இன்று வரையிலும் குறையாத போக்குவரத்து நெரிசல்!
/
காந்திபுரம் பாலத்தில் 2 இறங்குதளங்கள் அமைப்பதில்அதிகாரிகள் கூட்டுச்சதி; அரசு அனுமதி அதோ கதி!இன்று வரையிலும் குறையாத போக்குவரத்து நெரிசல்!
காந்திபுரம் பாலத்தில் 2 இறங்குதளங்கள் அமைப்பதில்அதிகாரிகள் கூட்டுச்சதி; அரசு அனுமதி அதோ கதி!இன்று வரையிலும் குறையாத போக்குவரத்து நெரிசல்!
காந்திபுரம் பாலத்தில் 2 இறங்குதளங்கள் அமைப்பதில்அதிகாரிகள் கூட்டுச்சதி; அரசு அனுமதி அதோ கதி!இன்று வரையிலும் குறையாத போக்குவரத்து நெரிசல்!
UPDATED : பிப் 07, 2024 02:04 AM
ADDED : பிப் 07, 2024 01:37 AM

-நமது நிருபர்-
காந்திபுரம் பாலத்தில் இரண்டு இறங்குதளங்கள் அமைக்கும் திட்டம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கூட்டுச்சதியால், அரசால் கைவிடப்பட்டுள்ளது. நெரிசலுக்கு தீர்வு கிடைத்து விடும் என காத்திருந்த பொதுமக்கள், தினமும் நொந்து நுாலாகின்றனர். அண்ணாந்து பார்த்தால், பெரும்பாலும் வாகனங்கள் இன்றி வெறிச்சென்றே கிடக்கிறது மேம்பாலம்!
கோவை காந்திபுரத்தில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், அங்கு மேம்பாலம் கட்டப்படும் என்று, 2010ல் நடந்த செம்மொழி மாநாட்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, பாலத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில், 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
முதலில், காந்திபுரம் மற்றும் நுாறடி ரோடு ஆகிய இரு சந்திப்புகளில், அவிநாசி ரோடு மேம்பாலத்தில் இருப்பது போன்று 'ரோட்டரி' அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இரு புறங்களிலிருந்தும் வரும் வாகனங்களும், கிராஸ்கட் ரோடு, பாரதியார் ரோடு, நுாறடி ரோடு மற்றும் சின்னச்சாமி ரோடு ஆகிய ரோடுகளில், இறங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
அதற்கு, இரண்டு சந்திப்புகளையும் ஒட்டியுள்ள வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் கோவில்களை அகற்றி, நிலம் கையகப்படுத்த வேண்டியிருந்தது.
சதியால் அதோ கதி!
கோவில்களுக்கு மாற்று இடம் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கட்டடங்களை அகற்றாமல் இருக்க, ஒரே நேர்கோடு போல ஏறி இறங்குவதாக, பாலத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.
இதற்குப் பதிலாக, நுாறடி ரோட்டிலிருந்து சித்தாபுதுார் வரை, இரண்டாம் அடுக்குப் பாலம் கட்டப்பட்டது. மொத்தம் ரூ.148 கோடி செலவழித்துக் கட்டப்பட்ட முதல் அடுக்கு பாலம், 2017 நவ.,1ல் திறக்கப்பட்டது. பாலம் திறந்தும், பெரும்பாலானோர் அதைப் பயன்படுத்தவில்லை; சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையாததால், மக்களிடம் கடும் விமர்சனம் எழுந்தது.
அதனால், காந்திபுரம் பாலத்தில், இரண்டு இறங்குதளங்கள் அமைக்க வேண்டுமென்று, கடந்த 2018ல் அப்போதிருந்த கலெக்டர் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அரசுக்குப் பரிந்துரைத்தனர்.
அதை ஏற்று, பாரதியார் ரோட்டை நோக்கி ஒன்றும், ஜி.பி.,சிக்னல் சந்திப்பில் 100 அடி ரோட்டை நோக்கி மற்றொன்றுமாக, இரண்டு இறங்குதளங்கள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்தது.
விரிவான திட்ட அறிக்கை, 2019 மே 9ல், தொழில்நுட்ப தணிக்கைக்குழுவிடம் அளிக்கப்பட்டது.
அக்குழுவின் பரிந்துரையை ஏற்று, இரு இறங்குதளங்கள் அமைக்க, ரூ.23 கோடியே 92 லட்சத்தை ஒதுக்கி, அரசு நிர்வாக ஒப்புதல் அளித்தது.
திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரை, தலைமைப் பொறியாளரின் பரிசீலனையில் இருந்தது.
தப்பிக்க கிடைத்தது மெட்ரோ!
அதற்குள், மெட்ரோ ரயில் திட்டம் வருகிறது, தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும்... என்றெல்லாம் சில காரணங்களைக் கூறி, இத்திட்டத்தை நிறுத்துமாறு, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலர் கூட்டுச்சதி செய்து, அரசுக்குப் பரிந்துரைத்தனர். அதனால், இந்த இறங்கு தளங்கள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது.
கோவைக்கு மெட்ரோ திட்டம், இப்போதைக்கு வர வாய்ப்பேயில்லை. வந்தாலும், இரண்டாவது அடுக்கு பாலத்துக்கான வடிவமைப்பே, முதல் அடுக்கு பாலத்துக்கும் செயல்படுத்தப்படும்.
இறங்கு தளங்களால், மெட்ரோ தடத்துக்கு இடையூறு இல்லை. அதேபோல, தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும், பெரும் நிதியைச் செலவிட்டு, பாலத்தைக் கட்டியது, மாநில நெடுஞ்சாலைத்துறைதான்.
என்ன செய்கிறது ஆளும் அரசு?
உண்மையில் பாலத்தை, தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டியிருந்தால், இறங்குதளங்களுடன் தான் பாலம் கட்டப்பட்டிருக்கும். ஆனால், நகரிலுள்ள பல லட்சம் மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், சில அதிகாரிகள், 'ஏதோ' சில சுயநல காரணங்களுக்காக, திட்டத்தை நிறுத்தியுள்ளனர். இன்றும் தீராத போக்குவரத்து நெரிசலுக்கு, அதுவேகாரணம்.
முந்தைய அரசு தவறு செய்திருக்கலாம்; மூன்று ஆண்டுகளாக அதைச் சரி செய்யாமல், இந்த அரசு என்ன செய்கிறது?

