/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முருகா... காப்பாற்று! மருதமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களை நடைபாதையின்றி ரோட்டில் நடப்பதால் ஆபத்து!
/
முருகா... காப்பாற்று! மருதமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களை நடைபாதையின்றி ரோட்டில் நடப்பதால் ஆபத்து!
முருகா... காப்பாற்று! மருதமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களை நடைபாதையின்றி ரோட்டில் நடப்பதால் ஆபத்து!
முருகா... காப்பாற்று! மருதமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களை நடைபாதையின்றி ரோட்டில் நடப்பதால் ஆபத்து!
ADDED : ஜன 27, 2024 12:03 AM

மருதமலைக்கு நடந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருவதால், அவர்களைப் பாதுகாக்கும் வகையில் நடைபாதை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை, மருதமலை சுப்பிரமணியர் கோவிலுக்கு, ஆண்டு முழுவதும் பல லட்சம் பக்தர்கள், வருகை தருகின்றனர். குறிப்பாக, தை மாதத்தில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நடந்தே மருதமலைக்கு வருகின்றனர்.
தடாகம் ரோட்டிலிருந்து, இடையர்பாளையம், வடவள்ளி வழியாக வருவோரை விட, லாலி ரோடு சந்திப்பிலிருந்து, வேளாண் பல்கலை, பி.என்.புதுார், வடவள்ளி, கல்வீரம்பாளையம் வழியாக நடந்து வருவோரே அதிகம். இந்த ரோட்டில், பி.என்.புதுாரிலிருந்து வடவள்ளி வரையிலான ரோடு, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆனால் தற்போதுள்ள போக்குவரத்தைச் சமாளிக்கும் அளவுக்கு, இந்த ரோடு விரிவாக்கம் செய்யப்படவில்லை. குறிப்பாக, பி.என்.புதுாரிலிருந்து வடவள்ளி வரையிலான பகுதியில், பல இடங்கள் மிகவும் குறுகலாக உள்ளன.
தனியார் சிலருடைய கட்டடங்களைக் காப்பாற்றுவதற்காக, சில பகுதிகளில் நிலம் குறைவாக கையகப்படுத்தப்பட்டதே, ரோடு குறுகலானதற்குக் காரணமென்று புகார் எழுந்தது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னும், அது சரி செய்யப்படவில்லை. மருதமலை, வடவள்ளி செல்லும் வாகனங்கள் மட்டுமின்றி, சமீபகாலமாக இந்த ரோட்டின் வழியாகவே, ஈஷா யோகா மையத்துக்கும், ஏராளமான வாகனங்கள் செல்வதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வேளாண் பல்கலைக்குப் பின்பு, இந்த ரோட்டில் எங்குமே நடைபாதை என்பதே இல்லை. அத்துடன் ரோட்டின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகளும் அதிகமாகி விட்டன.
இதனால், சாதாரண நாட்களிலேயே, இப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள், வேகமாக வரும் வாகனங்களுக்கு இடையில்தான், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டியுள்ளது.
இப்போது, இதே ரோட்டில் தான், பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்களும் அச்சத்தோடு பாதயாத்திரை செல்ல வேண்டியுள்ளது.
இதேபோல, வடவள்ளியிலிருந்து பாரதியார் பல்கலை வரையிலான ரோட்டை விரிவாக்கம் செய்வதற்கும், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முயற்சி எடுக்கப்பட்டது.
ஆட்சி மாறியதும், கடந்த மூன்றாண்டுகளாக அந்தப் பணியும் கிடப்பில் கிடக்கிறது. இந்த ரோட்டை விரைவாக விரிவுபடுத்துவதுடன், வேளாண் பல்கலை முதல் மருதமலை வரையிலும்,மேட்டுப்பாளையம் ரோடு சந்திப்பிலிருந்து கவுலி பிரவுன் ரோடு மற்றும் தடாகம் ரோடு பகுதியிலும்,நடைபாதை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைவலுத்துள்ளது.
குறைந்தபட்சம், லாலி ரோடு சந்திப்பிலிருந்து மருதமலை வரை, நடைபாதை அமைக்க வேண்டும்.
கடந்த இரண்டு நாட்களாக, மருதமலைக்கு வரும் பக்தர்கள் பலரும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்தில், மருதமலை ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது, பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதேபோல, இந்த நடைபாதையை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே, பல லட்சம் முருக பக்தர்களின் ஒருமித்த வேண்டுகோள்
-நமது நிருபர்-.

