/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையம் நகர மன்றத்தை கலைக்க வேண்டும்
/
மேட்டுப்பாளையம் நகர மன்றத்தை கலைக்க வேண்டும்
ADDED : டிச 15, 2025 05:26 AM

மேட்டுப்பாளையம்: -: ''பல்வேறு முறைகேடுகளும், பணிகளில் ஊழலும் நடந்துள்ளதை கண்டித்து, மேட்டுப்பாளையம் நகர மன்றத்தை கலைக்க வேண்டும், என, பா.ஜ., மாநில பொருளாளர் சேகர் பேசினார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடந்த ஊ ழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து, பா.ஜ., சார்பில், பஸ் ஸ்டாண்ட் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேசியதாவது: தி.மு.க.,வினர் விஞ்ஞான முறையில் ஊழல் செய்கின்றனர்.
அதனால் பா.ஜ.,விற்கு பாதிப்பு இல்லை. பொதுமக்கள் வழங்கிய வரிப்பணத்தில் தான், பணிகள் நடக்கின்றன. இதனால் பொதுமக்கள் வரிப்பணம் வீணாகிறது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடையில் ஊழல். புதிய பஸ் ஸ்டாண்ட் உயரமாக கட்டுவதற்கு பதிலாக, பல அடி ஆழம் மண்ணைத் தோண்டி அதை விற்பனை செய்து, தாழ்வாக பஸ் ஸ்டாண்ட் கட்டுவதிலும் ஊழல். பள்ளிகளில் தூய்மை செய்ய, பணியாளர்கள் நியமிப்பதில் பல முறைகேடுகள். குடிநீர் குழாய் உடைப்பு, மின்மோட்டார் பழுது செய்வதிலும், புதிதாக வாங்குவதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன.
குப்பை கிடங்கில் பல்வேறு பணிகள் செய்வதாக கூறி, போலியான ஆவணங்கள் தயார் செய்து முறைகேடு நடந்துள்ளன. இப்படி பல ஊழல்களும், முறைகேடுகளும் நடந்துள்ள மேட்டுப்பாளையம் நகர மன்றத்தை கலைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க, மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் நாசர், நகர செயலாளர் வான்மதி சேட் மற்றும் பா.ஜ., மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் உமாசங்கர் வரவேற்றார். கிஷோர் நன்றி கூறினார்.

