/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாளில் மத்தாப்பு போல மகிழ்ச்சி நிறையட்டும்! இல்லம் தோறும் தீபாவளி தித்திப்பு
/
வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாளில் மத்தாப்பு போல மகிழ்ச்சி நிறையட்டும்! இல்லம் தோறும் தீபாவளி தித்திப்பு
வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாளில் மத்தாப்பு போல மகிழ்ச்சி நிறையட்டும்! இல்லம் தோறும் தீபாவளி தித்திப்பு
வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாளில் மத்தாப்பு போல மகிழ்ச்சி நிறையட்டும்! இல்லம் தோறும் தீபாவளி தித்திப்பு
UPDATED : அக் 30, 2024 11:50 PM
ADDED : அக் 30, 2024 08:34 PM

பொள்ளாச்சி; புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பை சுவைத்து பல்வேறு தரப்பினரும் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.
ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளி பண்டிகைக்கான ஏற்பாடுகள், மாதக்கணக்கில் நடந்தாலும் அதன் நினைவுகள், அடுத்த ஆண்டு வரை நீடிப்பது வழக்கம். அவ்வகையில், இன்று, பொள்ளாச்சி நகர், சுற்றுப்பகுதி கிராமங்களில், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியை அள்ளித் தரும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
அதிகாலை எழுந்து, கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி பொங்க, அனைவரிடமும் வாழ்த்துகளையும் பகிர தயாராகி வருகின்றனர்.
அவ்வகையில், நேற்று இரவு முதலே கண்களைக் கவரும் வானவேடிக்கைகளும், காதை பிளக்கும் வெடிகளுடன் தீபாவளியை கொண்டாட துவங்கி விட்டனர்.
மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில் என, அனைத்து கோவில்களிலும், செல்வவளம் பெருகும் லட்சுமி குபேரர், சிறப்பு பூஜை இன்று நடக்கிறது.
இதுஒருபுறமிருக்க, தீபாவளி பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையையொட்டி, டாப்சிலிப், வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில், அரசு மற்றும் தனியார் விடுதிகளில் அறைகளுக்கான 'புக்கிங்' பெருமளவு நிறைவடைந்திருந்தது.
இதனால், ஆழியாறு, கவியருவி, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா பயணியர் நேற்றே உற்சாகத்துடன் வந்தடைந்தனர்.
பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில், குளிரான சீதோஷ்ண நிலை, அடர் வனம், பறவைகளின் ரீங்காரம் என இயற்கை எழில் கொஞ்சும் அழகைக் காண பலரும் முனைப்பு காட்டுகின்றனர். அங்குள்ள தங்கும் விடுதிகளில், தீபாவளி விடுமுறையொட்டி, 95 சதவீதம் 'புக்கிங்' முடிந்துள்ளது.
இதனால், வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி, விடுதிக்கு வரும் சுற்றுலாப் பயணியர், எக்காரணம் கொண்டும் பட்டாசு வெடிக்கக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வால்பாறை மலைப்பாதையில், ஆர்வக் கோளாறு காரணமாக, வனத்தில் அத்துமீறி மது அருந்தவும், நுழையவும் வாய்ப்புள்ளதால், அதனைக் கண்டறிந்து தடுக்கும் வகையில், வனக்குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

