sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வெல்லட்டும் வேளாண்மை; கோவையில் வேளாண் வணிகத் திருவிழா; விவசாயிகள், தொழில்முனைவோர் மகிழ்ச்சி

/

வெல்லட்டும் வேளாண்மை; கோவையில் வேளாண் வணிகத் திருவிழா; விவசாயிகள், தொழில்முனைவோர் மகிழ்ச்சி

வெல்லட்டும் வேளாண்மை; கோவையில் வேளாண் வணிகத் திருவிழா; விவசாயிகள், தொழில்முனைவோர் மகிழ்ச்சி

வெல்லட்டும் வேளாண்மை; கோவையில் வேளாண் வணிகத் திருவிழா; விவசாயிகள், தொழில்முனைவோர் மகிழ்ச்சி


UPDATED : டிச 28, 2025 07:08 AM

ADDED : டிச 28, 2025 05:08 AM

Google News

UPDATED : டிச 28, 2025 07:08 AM ADDED : டிச 28, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'தினமலர்' நாளிதழ் சார்பில் விவசாயிகளைக் கொண்டாடும் வகையில், 'வெல்லட்டும் வேளாண்மை' வேளாண் வணிகத் திருவிழா, கோவை, ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.

வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்வளர் காப்பக நிபுணர்களின் உதவியோடு, லாபகரமான விவசாயம், வேளாண் தொழில்முனைவை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியை, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் வாகே பல்வந்த் திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம், அவர்களின் தயாரிப்பு பொருட்கள் குறித்து விசாரித்து அறிந்தார்.

சுகுணா பம்ப்ஸ் அண்ட் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் லட்சுமிநாராயணசாமி, புரோசன் சோலார் நிர்வாக இயக்குனர் தனவேல், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சிவகுமார், அய்யப்பா பிளாஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குநர் கனகராஜ், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குனர் சோமசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் மற்றும் தொழில்முனைவில் விருப்பம் கொண்டவர்கள் ஆர்வமாக பங்கேற்று, அரசின் திட்டங்கள், தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனர். வேளாண் தொழில்நுட்ப வணிக காப்பகம், அய்யப்பா பிளாஸ்டிக் நிறுவனம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி இணைந்து

வழங்கின. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, சொட்டு நீர் பாசனத்துக்கான உபகரணங்கள் மாதிரி 'கிட்' வழங்கப்பட்டது.

நஞ்சில்லா உணவுக்கு உத்தரவாதம்

கருத்தரங்கில், நஞ்சில்லா உணவு குறித்து, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனர் சோமசுந்தரம் பேசியதாவது: நம் உணவுகளில் நம்மை அறியாமலேயே, பல்வேறு வழிகளில் நஞ்சுகள் கலக்கின்றன. பூச்சிக் கொல்லிகளில் இருந்து, பதப்படுத்தப்பட்ட பொருட்களை அவற்றின் காத்திருப்புக் காலத்தை நீட்டிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை உணவை நஞ்சாக்குகின்றன.

உலக நாடுகள் நமது வேளாண் பொருட்களைப் பார்த்து அஞ்சுவதற்கு, அவற்றில் இருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய பொருட்களே காரணம். உணவுப் பொருட்களில் உள்ள கடின உலோகங்கள், நஞ்சுயிரிகள், அலர்ஜன்ஸ் ஆகியவை உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன.

பெரும்பாலான களைச்செடிகள் மூலிகைகள். அவற்றை களைக்கொல்லிகளால் இல்லாமல் செய்துவிடுகிறோம். துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் நிறமிகளில் 'சூடான்' என்ற நஞ்சு இருக்கிறது. காஷ்மீர் குங்குமப்பூவில் இருந்து குமரியின் குச்சிக்கிழங்கு வரை இந்தியாவில் நல்லுணவுகள் விளைந்தாலும் நஞ்சில்லா உணவை நாம் உண்பதில்லை.

இயற்கை விவசாயம் நஞ்சில்லா உணவுக்கு உத்தரவாதம். ஒரு பறவை ஆண்டுக்கு, ஐந்து லட்சம் சாறு உறிஞ்சும் பூச்சிகளை உண்ணும். பறக்கும் பூச்சிகள் பொதுவாக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், அவற்றையும் கொல்கிறோம். நன்மை தரும் இரை விழுங்கிகளையும் கொன்று விடுகிறோம். இருப்பதிலேயே குறைவான பாதிப்பு கொண்ட மாலத்தியான் பூச்சிக்கொல்லியை ஆய்வு செய்ததில், அது உணவுச் சங்கிலியில் கலக்கும்போது, 45 மடங்கு பெருகி, உணவை கடும் விஷமாக்கி விடுகிறது.

எனவே, இயற்கை விவசாயத்தின் வாயிலாக, நஞ்சில்லா உணவைப் பெறலாம். மண் வளத்தில் இருந்து பூச்சி, நோய் கட்டுப்பாடு வரை இயற்கை முறையைப் பின்பற்றலாம்.வேளாண் பல்கலையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் உள்ளது. அங்கு அளிக்கப்படும் பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்கலாம்.

வேளாண் பல்கலையின் இணையதளத்தில், 250 பக்கங்கள் இயற்கை விவசாயத்துக்காகவே அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. நஞ்சில்லா உணவு காலத்தின் கட்டாயம். இயற்கை விளைபொருட்களின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். அதை வாங்கும் சக்தி அனைவருக்கும் இருக்கிறது. மருத்துவத்துக்குச் செலவிடுவதை விட உணவுக்குச் செலவிடலாம். இயற்கை, அங்கக வேளாண்மை விளைபொருட்களை நோக்கி நாம் நகர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

புருவங்களை உயர வைத்தபுத்தொழில் அரங்குகள்


* நிகழ்வின் ஒருபகுதியாக, 40க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தன. இங்கு, வேளாண் சார்உற்பத்தி பொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், இடுபொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.
* சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பிஸ்கட், அவல், இனிப்புகள், ஹெல்த் மிக்ஸ் பவுடர், குளிர்பானங்கள், தேங்காயில் இருந்து தயாரிக்கப்பட்ட திண்பண்டங்கள், எண்ணெய் இல்லாத தேங்காய் சிப்ஸ் அரங்குகளில், மக்கள் விரும்பி வாங்கி சென்றனர்.
* மூங்கிலில் இருந்து தயாரிக்கப்பட்ட சானிட்டரி நாப்கின், மூங்கில், வேப்பமரத்தால் செய்யப்பட்ட அலங்காரப்பொருட்கள், மூங்கிலில் தயாரிக்கப்பட்ட 'தெரபி' கருவிகள் தனிகவனம் பெற்றன.
* எலி, பாம்பு, கொசுக்களுக்கான இயற்கை விரட்டி, காய்கறி, பழங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அழகுசாதன பொருட்கள் அரங்கில் இடம்பெற்றன.
* குப்பையில் இருந்து புழுக்களை உருவாக்கி, அப்புரதங்களை கால்நடை உணவாக மாற்றும் தொழில்நுட்பம், விவசாயிகளிடம் தனி வரவேற்பை பெற்றது.
* அரிசி, தானியங்களில் பூச்சிகள் வருவதை தடுக்கும் யு.வி., லைட் கருவி, களை எடுக்கும் கருவி, தேங்காய் மட்டை உரிக்கும் கருவி, பேட்டரி டில்லர் கருவிகளின் செயல்பாடுகளை ஆர்வ முடன் கேட்டறிந்தனர்.



வெற்றியாளர்களின் கதை!

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வேளாண் தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தின் உதவியோடு வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கியவர்கள், தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். 75 வகையான சிறுதானிய உணவு, மூங்கில் இழைகளால் ஆன சானிடரி நாப்கின், தேங்காய் சிப்ஸ், ஆயுர்வேத மருந்து மற்றும் அழகுசாதனங்கள், பயிரில் வேரின் ஈரப்பதம் அறிந்து நீர், உரம் வழங்கும் தானியங்கி சாதனம், நறுமண எண்ணெய், தானியங்களைச் சேமிக்கும்போது வரும் செல் பூச்சிகளுக்கான தீர்வு என பல்வேறு தொழில்களை மேற்கொள்வது குறித்தும், அதற்கான அரசுத் திட்டங்கள், வழிகாட்டல்களைப் பெற்றது குறித்தும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.



பருவத்தில் நெல் சாகுபடி; மகசூல் அள்ளும் உள்ளபடி

கோவை வேளாண் பல்கலை -பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம் பேராசிரியர் அமுதா பேசியதாவது: உரிய பருவத்தில் உகந்த நெல் ரகத்தை மட்டும் பயிரிட்டால், அதிக மகசூல் பெற முடியும். குறுகியகால ரகங்களில் சொர்ணவாரி, கார், குறுவை, நவரை பட்டங்களில், 'கோ 54' பயிரிடலாம். பொள்ளாச்சியில் 9 டன் வரை மகசூல் எடுத்துள்ளனர். கோ 55 ரகம் 6 டன் விளையும். மொத்த மகசூலை மட்டும் கணக்கில் கொள்ளக்கூடாது. அரவைத் திறன், முழு அரிசி காணும் திறனையும் பார்க்க வேண்டும். ஏ.டி.டி., 57, விழுப்புரத்தில் 9 டன் வரை எடுத்துள்ளனர். இது ஏ.டி.டி. 43 ரகத்துக்கு மாற்று. டிபிஎஸ் 5 ரகம் இட்லி குண்டு ரகம் அதிக மாவுத்திறன் கொண்டது. ஏ.டி.டி., இட்லி குண்டு ரகத்தை தாளடி பருவத்திலும் சாகுபடி செய்யலாம். நமது பாரம்பரிய ரகங்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் அசலான ரகங்களை அடையாளப்படுத்தி தொகுத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.



லாபகரமான வேளாண் தொழிலுக்கு 3 முக்கியம்!
வேளாண் சார் தொழில்துவங்க விரும்பு வோருக்கு, வேளாண் பல்கலையில் இயங்கும் தொழில்நுட்ப வணிகக் காப்பகம் வழிகாட்டுகிறது. ஸ்டார்ட்அப் துவங்க விரும்புபவர், ஒரு ஐடியாவுடன் வந்தால், அதை உற்பத்திப் பொருளாக மாற்றுவது, அதற்கான பிராண்டிங், பேக்கேஜிங், சந்தை வாய்ப்பு என, அனைத்துக்கும் வழிகாட்டுகிறோம். விவசாயிகளைப் பொறுத்தவரை லாபகரமான விவசாயத்துக்கு மூன்று விஷயம் முக்கியம். முதலாவது, உற்பத்திப் பொருளை மதிப்புக்கூட்டுங்கள். வருவாய் அதிகரிக்கும். இரண்டாவது, அரசின் திட்டங்கள், மானியங்கள் பற்றித் தெரிந்து, பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மூன்றாவதாக, வழக்கமான நடைமுறைகளை விட்டு, புதிய தொழில்நுட்பங்களை தயங்காமல் பின்பற்ற வேண்டும். - ஞானசம்பந்தம், தலைமைச்செயல் அலுவலர், தொழில்நுட்ப வணிகக் காப்பகம்


கொட்டிக்கிடக்கும் மானியத் திட்டங்கள்
தமிழக அரசின் எம்.எஸ்.எம்.இ., துறையின் கீழ் மாவட்ட தொழில் மையம் செயல்படுகிறது. தொழில் துவங்க விரும்புவோருக்கு வழிகாட்டி, ஊக்குவிப்பதுதான் இம்மையத்தின் நோக்கம். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப் படுகிறது. இதில், ரூ.3.75 லட்சம் வரை மானியம். கல்வித் தகுதி 8ம் வகுப்பு. தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் 25 சதவீத மானியம், பிரதமரின் குறுந்தொழில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் 35 சதவீத மானியம், நீட்ஸ் திட்டத்தில் ரூ.5 கோடி வரை நிதியுதவி, ரூ.75 லட்சம் வரை மானியம், 3 சதவீத வட்டி மானியம், அண்ணல் அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டத்தில், 35 சதவீத மானியம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், 35 சதவீதம் வரை மானியம் என ஏராளமான திட்டங்கள் உள்ளன. - சண்முக சிவா, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர்


வியாபாரம் செய்தால் விவசாயிகள் ஜெயிக்கலாம்
விவசாயிகள் உற்பத்திப் பொருட்களை விற்க, இடைத்தரகர்களை நம்பாமல் நீங்களே களத்தில் இறங்க வேண்டும். சிறு விவசாயிகளுக்கு, உழவர் சந்தை உள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில்மொத்த வியாபாரிகளுக்கு நேரடியாக விற்பதன் மூலம், குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படும்.வட்டார வாரியாக, விவசாயிகளை ஒன்றிணைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கியுள்ளோம்.
இங்கே, தரத்திற்கு ஏற்ப, விளைப்பொருட்களுக்கு நீங்களே விலை நிர்ணயிக்கலாம். இயந்திரங்கள் வாங்க, 'பி.எம்.எப்.எம்.இ.,' திட்டத்தில், 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் படிப்பு முடித்தால், தொழில் துவங்க, மானியம் வழங்கும் திட்டங்கள் உள்ளன. முன்வருபவர்களுக்கு வழிகாட்டத் தயாராக இருக்கிறோம். - சுகன்யா, உதவி வேளாண் அலுவலர்,வேளாண் வணிகத்துறை,கோவை


45 நாட்கள் பயிற்சி; தொழில் துவங்க மானியம்
நபார்டு வங்கி நேரடியாக, விவசாயிகளுக்கு கடன் தருவதில்லை. ஆனால், விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கும், சிறு, குறு, நீண்ட கால வேளாண் திட்டங்களின் பெயரில், வங்கிகளுக்கு கடனுதவி அளிக்கிறது. வேளாண் பல்கலை, கே.வி.கே.மையங்களுடன் இணைந்து வேளாண் இன்குபேட்டர் மையங்களை உருவாக்கப்பட்டுள்ளன. மண்டல வாரியாக வேளாண் தொழிலக தொகுப்புகள் அமைக்க நிதி ஆதாரங்களை வழங்குகிறது சிறு, குறு தொழில் முனைவோர் ஊக்குவிக்க, 'நாப்கிசான்', 'நாப்வென்சர்' திட்டங்கள் மூலம், வேளாண் சார் தொழில்முனைவோருக்கு, கடனுதவி வழங்கப்படுகிறது. வேளாண் படிப்பு முடித்தோருக்கு, 45 நாட்கள் பயிற்சியுடன் தொழில் துவங்க மானியம் வழங்கப்படுகிறது. - திருமலா, மாவட்ட வளர்ச்சி மேலாளர், நபார்டு வங்கி


மக்களை கவர்ந்திழுக்கும் 'பேக்கிங்' முறை
விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை, மக்களுக்கு கொண்டு சேர்க்கும்போது, சேதமடையாமல், தட்பவெப்ப சூழல்களால் அவை பாதிக்கப்படாமல் இருக்க, 'பேக்கிங்'கில்கவனம் செலுத்துவது அவசியம். தரமான பொருட்களை விற்றாலும், வித்தியாசமான பேக்கிங் முறையால் நுகர்வோரைக் கவரலாம். எந்த பொருளுக்கு, எந்த மூலப்பொருளைக் கொண்டு, பேக்கிங் செய்ய வேண்டும் என்ற புரிதல் அவசியம். தற்போது, குளிர்பானங்களை பாட்டிலில் மட்டுமல்லாமல், அலுமினியம் சீட் கொண்ட பேப்பர் கவர்களில் விற்கின்றனர். மதிப்புக்கூட்டியபொருட்களை விற்கும்போது, பேக்கிங் செய்யும் போதுதான், நிறுவன பெயர், லோகோ, உணவுப்பொருளின் குறிப்பு, தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் காலம் என, நுகர்வோர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்களை, குறிப்பிட முடியும். - அமுதசெல்வி, உதவி பேராசிரியர், உணவு பதனிடல் துறை, வேளாண்பல்கலை, கோவை


பயனுள்ள நிகழ்ச்சி; பார்வையாளர் மகிழ்ச்சி


புதிய தொழில்நுட்பம்
நான் எம்.டெக்., படித்துள்ளேன்.இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வத்தால், தென்னை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்கிறேன். அதுசார்ந்த புதிய தொழில்நுட்பங்களை அறிய வந்தேன். இந்நிகழ்ச்சி மிக பயனுள்ளதாக இருந்தது.- ராதாகிருஷ்ணன், வீரபாண்டி.


அரசின் திட்டங்கள் அறிந்தேன்
மாட்டுப்பண்ணை வைத்து பால் சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்களை விற்கிறேன். இத்தொழிலை விரிவாக்க, அரசின் மானிய திட்டங்கள் பற்றி கருத்தரங்கில் தெரிவித்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. - கல்பனா, சிங்காநல்லுார்.


புதிய வேளாண் தொழில்கள்
வேளாண் சார்ந்த தொழில் முனைவோராக வேண்டுமென்பது நீண்டநாள் கனவு. இதுசார்ந்த தகவல்களை ஒரே இடத்தில் அறிவதற்காகவே, நிகழ்ச்சிக்கு வந்தேன். கண்காட்சியில் நிறைய அரங்குகளில் புதுமையான கண்டுபிடிப்புகள் உள்ளன. 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.- மீனாட்சி சுந்தராம்பாள், கோவில்பாளையம்.


புதுமையான பொருட்கள்
இயற்கை விவசாயிகள், அவர்கள் உற்பத்தி செய்யும் மதிப்பு கூட்டு பொருட்களை அறிவதற்காக வந்தேன். இங்குள்ள ஸ்டால்களில் நிறைய புதுமையான பொருட்கள் உள்ளன. அனைத்தையும்வாங்கியுள்ளேன். - அரவிந்த், பீளமேடு.







      Dinamalar
      Follow us