/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருநங்கை கொலையில் ஐ.டி., ஊழியர் கைது; விமானத்தில் வந்து ஆளை மாற்றி கொன்ற கொடூரம்
/
திருநங்கை கொலையில் ஐ.டி., ஊழியர் கைது; விமானத்தில் வந்து ஆளை மாற்றி கொன்ற கொடூரம்
திருநங்கை கொலையில் ஐ.டி., ஊழியர் கைது; விமானத்தில் வந்து ஆளை மாற்றி கொன்ற கொடூரம்
திருநங்கை கொலையில் ஐ.டி., ஊழியர் கைது; விமானத்தில் வந்து ஆளை மாற்றி கொன்ற கொடூரம்
ADDED : பிப் 03, 2024 01:24 AM

கோவை:கோவை மக்களை பீதிக்குள்ளாக்கிய திருநங்கை கொலை வழக்கு விவகாரத்தில், சென்னையை சேர்ந்த ஐ.டி., ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோவை, தெலுங்குபாளையம், எல்.ஐ.சி., காலனியை சேர்ந்தவர் திருநங்கை தனலட்சுமி, 39, கோவையில் உள்ள ஒரு ஐ.டி.,நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன் மும்பை சென்றார்.
இவருக்கு, மருதமலை அடிவாரம் அன்னை இந்திரா நகரில் உள்ள திருநங்கை மாசிலாமணி, 33 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன், மும்பையில் இருந்து திரும்பிய தனலட்சுமி மாசிலாமணி வீட்டில் தங்கினார்.
கடந்த, 29ம் தேதி இரவு தனலட்சுமி, மாசிலாமணி, மாசிலாமணியின் நண்பர் மணி ஆகியோர் உணவு உட்கொண்டனர். பின் மாசிலாமணியும், மணியும் வெளியே சென்றனர்.
சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியபோது, தனலட்சுமி, 27 இடங்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
வடவள்ளி போலீசார் வழக்கு பதிந்து, நான்கு தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். அப்பகுதி சி.சி.டி.வி.,யில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் நடமாடுவது தெரிந்தது.
விசாரணையில், தனலட்சுமியை கொலை செய்தது, சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் கந்தசாமி 38, என்பதும், ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிந்தது. மதுரையில் பதுங்கி இருந்த அவரை, தனிப்படை போலீசார் கைது செய்து, கோவை அழைத்து வந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தினேஷ் கந்தசாமி, அடிக்கடி கோவை மருதமலை முருகன் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு கடந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தியன்று மருதமலைக்கு வந்துள்ளார். அவர் மருதமலை பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், தினேஷ் கந்தசாமியை தாக்கி பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
அக்., மாதம் அவர் மீண்டும் மருதமலைக்கு வந்தார். அப்போது அவர் தன்னை தாக்கி பணம் பறித்தவர்கள் அங்கு உள்ளார்களா என தேடிப்பார்த்தார். அப்போது திருநங்கை மாசிலாமணி, மணி வசித்து வந்த வீட்டின் அருகே சென்றுள்ளார்.
இதனை பார்த்த மாசிலாமணி, மணி ஆகியோர் தினேஷ் கந்தசாமியிடம் விசாரித்துள்ளனர். அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. ஆத்திரம் அடைந்த அவர்கள் தினேஷ் கந்தசாமியை தாக்கியுள்ளனர்.
அந்த சமயத்தில், தினேஷ் கந்தசாமியை தேடி கோவையில் வசித்து வரும் அவரது பெற்றோர் வந்துள்ளனர். மகனை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். அப்போது மாசிலாமணி, பெற்றோரையும் தாக்கி உள்ளார். பெற்றோரை தாக்கியதால், தினேசுக்கு மாசிலமாணி மீது கோபம் ஏற்பட்டது.
அவரை கொலை செய்ய திட்டமிட்ட தினேஷ் கந்தசாமி, 29-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். மாசிலாமணி வீட்டுக்கு சென்ற அவர், அங்கு தனலட்சுமி மட்டும் துாங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டார்.
அவரை மாசிலாமணி என தவறாக நினைத்து, கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்தார். பின் பழனிக்கு சென்று, மொட்டையடித்து மதுரைக்கு தப்பினார்.
அங்கு தனிப்படை போலீசார், அவரை கைது செய்தனர். போலீசார் கைது செய்த பின்னர் தான், தினேஷ் கந்தசாமிக்கு, திருநங்கை மாசிலாமணிக்கு பதிலாக தனலட்சுமியை கொன்றது தெரியவந்துள்ளது.
இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

