/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நூறு நாள் திட்டத்தில் முறைகேடுகளை கண்டறிய சமூக தணிக்கை துவக்கம் :சிறப்பு கிராம சபையில் பங்கேற்க அழைப்பு
/
நூறு நாள் திட்டத்தில் முறைகேடுகளை கண்டறிய சமூக தணிக்கை துவக்கம் :சிறப்பு கிராம சபையில் பங்கேற்க அழைப்பு
நூறு நாள் திட்டத்தில் முறைகேடுகளை கண்டறிய சமூக தணிக்கை துவக்கம் :சிறப்பு கிராம சபையில் பங்கேற்க அழைப்பு
நூறு நாள் திட்டத்தில் முறைகேடுகளை கண்டறிய சமூக தணிக்கை துவக்கம் :சிறப்பு கிராம சபையில் பங்கேற்க அழைப்பு
ADDED : பிப் 13, 2024 10:29 PM
அன்னூர்;பொதுமக்கள் ஓர் ஆண்டாக எதிர்பார்த்து வந்த, 100 நாள் வேலை திட்டத்தில்,
நடந்த பணிகள் குறித்து, சமூக தணிக்கை அன்னூர் வட்டாரத்தில்
துவங்கியுள்ளது. மேலும் வரும் 16ம் தேதி நடக்கும் சிறப்பு கிராம சபை
கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நுாறு நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும், 228 ஊராட்சிகளிலும், தினமும் 15 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். அன்னூர் ஒன்றியத்தில் தினமும் 1500 பேர் குளம், குட்டை தூர் வாருதல், மரக்கன்று நடுதல், சாலை பராமரித்தல், தனியார் தோட்டங்களில் வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
சமூக தணிக்கை
பணிகள் 100 சதவீதம் சரியாக நடைபெறுகிறதா, இந்தத் திட்டத்தில் சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளனவா, அவை பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன்படுகிறதா என்று கண்டறிய ஆண்டுதோறும் சமூகத் தணிக்கை நடைபெறுகிறது.
பிற ஒன்றியங்களில் இருந்து அலுவலர்கள், சுய உதவி குழு கூட்டமைப்பினர் தணிக்கையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். தணிக்கையாளர் குழு சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு சென்று செய்யப்பட்ட பணிகளை அளவீடு செய்கின்றனர். 100 நாள் வேலை திட்ட ஆவணங்களை பெற்று, எந்தெந்த தொழிலாளருக்கு சம்பளம் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட பயனாளியின் வங்கி கணக்கு புத்தகத்தை பரிசோதித்து பார்க்கின்றனர். நான்கு நாட்கள் சமூக தணிக்கை செய்து அதனுடைய அறிக்கையை ஐந்தாவது நாள் நடைபெறும் சிறப்பு கிராம சபையில் வைக்கின்றனர். சமூகத் தணிக்கை அறிக்கையை அனைவரும் வாசிக்கலாம்.
ஐந்து கட்டங்கள்
கடந்த 2022 ஏப். 1ம் தேதி முதல் 2023 மார்ச் வரை அன்னூர் ஒன்றியத்தில் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை நேற்று முன்தினம் துவங்கியது. ஐந்து கட்டங்களாக ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு சமூக தணிக்கை நடத்தப்படுகிறது.
முதல் கட்டத்தில் அ.மேட்டுப்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, அல்லப்பாளையம், ஆம்போதி ஆகிய நான்கு ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. தனியார் தோட்டங்களுக்கும் குளங்களுக்கும் தணிக்கையாளர்கள் சென்று அளவீடு செய்து வருகின்றனர். வருகிற 16ம் தேதி இந்த நான்கு ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் காலை 11:00 மணிக்கு நடக்கிறது. ஊராட்சியைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பொதுமக்கள் இதில் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
இரண்டாம் கட்டமாக கஞ்சப்பள்ளி, கணுவக்கரை, காரேகவுண்டம்பாளையம், கரியாம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் வருகிற 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை சமூகத் தணிக்கை நடக்கிறது. 23ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
மூன்றாவது கட்டமாக, 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை தணிக்கை செய்யப்படுகிறது. மார்ச் 1ம் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கிறது. நான்காவது கட்டமாக மார்ச் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரையும், 8ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. ஐந்தாம் கட்டமாக மார்ச் 15ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

