/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறை மலைப்பாதையில் விபத்துகள் அதிகரிப்பு! வேகத்தை குறைக்க எச்சரிக்கை
/
வால்பாறை மலைப்பாதையில் விபத்துகள் அதிகரிப்பு! வேகத்தை குறைக்க எச்சரிக்கை
வால்பாறை மலைப்பாதையில் விபத்துகள் அதிகரிப்பு! வேகத்தை குறைக்க எச்சரிக்கை
வால்பாறை மலைப்பாதையில் விபத்துகள் அதிகரிப்பு! வேகத்தை குறைக்க எச்சரிக்கை
ADDED : செப் 12, 2025 09:25 PM

பொள்ளாச்சி: வால்பாறை மலைப்பாதையில்நாளுக்குநாள் விபத்துகள் அதிகரித்து வருவதால், வாகனங்களின் வேகத்தை குறைத்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டுமென,வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் எச்சரித்துள்ளனர்.
பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், ஆழியாறில் இருந்து, வால்பாறை மலைப்பாதையில், 40 கொண்டை ஊசிவளைவுகள் உள்ளன.இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன.
வளைந்து, நெளிந்து செல்லும் மலைப்பாதையில், நகரப்பகுதியில் இருந்து வருவோர், 'த்ரில்'லாக வாகனம் இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், வேகமாக வாகனங்களை இயக்குகின்றனர்.
அதிகதிறன் கொண்ட இருசக்கர வாகனங்களில், வேகமாக செல்வதை மொபைல்போனில் வீடியோ எடுத்து, சமூகவலைதளங்களில் பகிர்ந்து, அதிக 'லைக்ஸ்'களை பெற, ஆர்வம் காட்டுகின்றனர்.
வால்பாறை ரோடு மட்டுமின்றி, மற்ற ரோடுகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிலர், 'ஸ்டையில்' என்ற பெயரில், வாகனத்தை வளைத்து, வளைத்து வேகமாக ஓட்டி மற்றவர்களை அச்சப்படுத்தி, கவனத்தை சிதைத்து விபத்து ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது.
மேலும், சமவெளியில் இயக்குவது போல சுற்றுலா வாகனங்களை மலைப்பகுதியில் இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.கடந்த, மூன்று மாதங்களில், கவர்க்கல் அருகே திருப்பூரில் இருந்து வந்த பஸ் விபத்துக்குள்ளானது.
சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து என, ஐந்துக்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் சுற்றுலா பயணியர் தப்பினர்.
ஆனாலும், கவனமின்றி வேகமாக வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. காடம்பாறை, காண்டூர் கால்வாய், ஒட்டபாலம், சின்னார்பதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு விபத்துகள் ஏற்படுகின்றன.
நேற்று முன்தினம் கூட, புதுச்சேரியில் இருந்து வால்பாறை வந்து, திரும்பி சென்ற போது வாகனம் கவிழந்து நான்கு பேர் காயமடைந்தனர்.
கடந்த, மூன்று மாதங்களில், 15 விபத்துகளில், 40 பேர் காயமடைந்துள்ளர். நவமலை ரோட்டில் வாகனம் கவிழ்ந்த விபத்தில், பழங்குடியின மக்கள் ஐந்து பேர் இறந்துள்ளனர்.
இதுபோன்று, விபத்துகளை தவிர்க்க, மலைப்பாதையில் வேகமாக வாகனங்களை இயக்குவதை தவிர்த்து, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என, போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
வால்பாறை ரோடு வளைவுகள் நிறைந்தது. ஆனால், மிதவேகத்தில் செல்ல ஓட்டுநர்கள் விரும்புவதில்லை. மலைப்பாதையில் விபத்துகளை தவிர்க்க விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
மலையில் இருந்து இறங்கும் வாகனங்கள், எதிரே மலையேறும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும்.ஒவ்வொரு வளைவுகளில் திரும்பும் போது, ஹாரன்ஒலிக்க செய்து, மற்ற வாகனங்கள் வருகிறதா என பார்த்து பாதுகாப்பாக திருப்ப வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்தால் விபத்துகளை தவிர்க்கலாம்.
மலைப்பாதையில் வாகன ஓட்டுநர்களுக்கு, இதுகுறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, கட்டாயம் ெஹல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும் என, அறிவுறுத்துகிறோம். இவ்வாறு, கூறினர்.
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன் கூறியதாவது:
வால்பாறை ரோட்டில், சுற்றுலா வாகனங்களை சமவெளிப்பகுதியில் இயக்குவது போன்று வேகமாக இயக்குவதே விபத்துக்கு முக்கிய காரணம். மலைப்பாதையில் உற்சாகத்தில் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்படுகிறது.
வளைவுகளில் திரும்பும் போது அவசரம் காட்டாமல், பாதுகாப்புடன் திரும்ப வேண்டும். சாதாரண நாட்களில் வாகனங்கள் இயக்குவதற்கும், மழைக்காலங்களில் வாகனங்கள் இயக்குவதற்கும் வித்தியாசம் உள்ளது.
அதுபோன்று, சமவெளிப்பகுதிக்கும், மலைப்பகுதியில் வாகனங்கள் இயக்கவும் வித்தியாசத்தை உணர வேண்டும். வேகத்தை விட விவேகம் மிகமுக்கியம். மழைப்பொழிவு இருக்கும் போது, ரோடுகளில், 'கிரிப்' கிடைக்காது, பாறை கற்கள் சரிந்து விழ வாய்ப்புள்ளது. இதையெல்லாம் மனதில் கொள்ளவேண்டும். இவ்வாறு, கூறினர்.