/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விலையை எதிர்பார்த்து தக்காளியில் ஆர்வம் சாகுபடி துவங்கியாச்சு! நாற்றுப்பண்ணைகளில் விற்பனை அதிகரிப்பு
/
விலையை எதிர்பார்த்து தக்காளியில் ஆர்வம் சாகுபடி துவங்கியாச்சு! நாற்றுப்பண்ணைகளில் விற்பனை அதிகரிப்பு
விலையை எதிர்பார்த்து தக்காளியில் ஆர்வம் சாகுபடி துவங்கியாச்சு! நாற்றுப்பண்ணைகளில் விற்பனை அதிகரிப்பு
விலையை எதிர்பார்த்து தக்காளியில் ஆர்வம் சாகுபடி துவங்கியாச்சு! நாற்றுப்பண்ணைகளில் விற்பனை அதிகரிப்பு
ADDED : பிப் 07, 2024 12:52 AM

உடுமலை:உடுமலை பகுதிகளில், விலையை எதிர்பார்த்து, தக்காளி, மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், தக்காளி, மிளகாய், கத்தரி, சின்ன வெங்காயம் என காய்கறி பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு பருவ மழைகள் குறைந்த நிலையில், தற்போது வெயலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால், பயிர் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.
இந்நிலையில், இறவை பாசனத்தில், கிணறு, போர்வெல்களில் நீர் இருப்பு, பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனம் மற்றும் அமராவதி பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்படுவதை எதிர்பார்த்து, குறைந்த கால சாகுபடியான காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர்.
விவசாயிகளுக்கு தேவையான காய்கறி பயிர் நாற்றுக்கள், இப்பகுதிகளிலுள்ள, 30க்கும் மேற்பட்ட தனியார் நாற்றுப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மிளகாயும் அதிகரிப்பு
கடந்தாண்டு, வரத்து குறைவு காரணமாக, தக்காளி விலை உச்சத்தை தொட்டது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 1,800 ரூபாய் வரை விற்றது.
நடப்பு ஆண்டிலும், பருவ மழை குறைவு காரணமாக, காய்கறி சாகுபடி பரப்பளவு பாதியாக குறைந்துள்ள நிலையில், பாசனத்திற்கு தேவையான நீர் இருப்பு உள்ள விவசாயிகள், தக்காளி நடவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வறட்சியை தாங்கி வளரும், வீரிய ஒட்டு ரக செடிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். நாற்றுப்பண்ணைகளில், ரகத்திற்கு ஏற்ப, ஒரு தக்காளி நாற்று, 50 காசு முதல், 90 காசு வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், நிலையான விலை காரணமாக, மிளகாய் சாகுபடியும் அதிகரித்து வருகிறது.
தைப்பட்டம் சிறப்பு
நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது: உடுமலை பகுதியில் ஆண்டு முழுவதும் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்பட்டாலும், தைப்பட்டம் சிறப்பானதாக இருக்கும்.
கடந்தாண்டு பருவ மழை குறைந்து, டிச., மாத இறுதியில் மட்டுமே மழை கிடைத்தது. குளிர் கால மழை பெய்யாத நிலையில், கோடை கால மழையும் நடப்பாண்டு குறையும் சூழல் உள்ளது.
இதனால், உடுமலை பகுதிகளில், வழக்கமாக தை பட்ட காய்கறி சாகுபடியில், 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.
70 நாட்களில் மகசூல், 40 நாட்களுக்கு அறுவடை மேற்கொள்ளலாம், என்ற குறுகிய கால பயிர் சாகுபடியான, தக்காளி நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்தாண்டு, தக்காளிக்கு அதிக விலை கிடைத்ததால், அதே போல், நடப்பு ஆண்டும் இருக்கும் என்ற நம்பிக்கையில், தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், தற்போது நாற்றுப்பண்ணைகளில் தக்காளி நாற்றுக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அதே போல், ஒரு கிலோ, 50 ரூபாய்க்கு மேல் மிளகாய் விற்று வருவதால், கூடுதல் நீர் இருப்பு உள்ள ஒரு சில விவசாயிகள், மிளகாய் நடவு செய்து வருகின்றனர்.
மற்ற பயிர்களாக, கத்தரி, காலிபிளவர், பீட்ரூட் நடவு குறைந்துள்ளது. அதே போல், கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், சின்ன வெங்காயம் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளே நாற்றங்கால் அமைத்து, நாற்றுக்கள் உற்பத்தி செய்து, நடவு செய்து வருகின்றனர்.
இவ்வாறு, நாற்றுப்பண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

