/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு பாசனத்துக்கு நீர் திறப்பால் மகிழ்ச்சி
/
ஆழியாறு பாசனத்துக்கு நீர் திறப்பால் மகிழ்ச்சி
ADDED : நவ 19, 2024 11:43 PM
ஆனைமலை; ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு இன்று நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆழியாறு அணையில் இருந்து, பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. நடப்பாண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க பழைய, புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.விவசாயிகள் கோரிக்கை ஏற்று நீர்வளத்துறை அதிகாரிகள், அரசுக்கு கருத்துரு அனுப்பினர். இதையேற்று, அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.
* ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட, 6,400 ஏக்கர் நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்துக்காக இன்று (20ம் தேதி) முதல், 2025ம் ஆண்டு ஏப்., 15ம் தேதி வரை 146 நாட்களுக்கு, 1,089 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
* ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்தில், பொள்ளாச்சி கால்வாய், 'அ' மண்டலம், வேட்டைக்காரன்புதுார் கால்வாய், 'ஆ' மண்டலம், சேத்துமடை கால்வாய், 'அ' மண்டலம், ஆழியாறு ஊட்டுக்கால்வாய், 'அ' மண்டம் என மொத்தம், 22,116 ஏக்கர் பாசன பகுதிகளுக்கு இன்று முதல், 2025 ஏப்., 4ம் தேதி முடிய, 135 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு ஆழியாறு அணையில் இருந்து, 2,709 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கவும்; தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஆழியாறு பழைய மற்றும் புதிய பாசனத்துக்கு, விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, நீர் திறக்க உத்தரவிட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

