/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிகளை பின்பற்றாத அரசு பஸ்கள்; முறைபடுத்த மக்கள் எதிர்பார்ப்பு
/
விதிகளை பின்பற்றாத அரசு பஸ்கள்; முறைபடுத்த மக்கள் எதிர்பார்ப்பு
விதிகளை பின்பற்றாத அரசு பஸ்கள்; முறைபடுத்த மக்கள் எதிர்பார்ப்பு
விதிகளை பின்பற்றாத அரசு பஸ்கள்; முறைபடுத்த மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 24, 2024 09:33 PM
பொள்ளாச்சி ; அனைத்து அரசு பஸ்களிலும், தீ தடுப்பு கருவிகள், மருந்துப் பொருட்களை உள்ளடக்கிய முதலுதவி பெட்டி, வழித்தட மேப் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் உள்ள அரசு போக்குவரத்து கழக மூன்று பணிமனைகளில் இருந்து, புறநகர் மற்றும் கிராமங்களுக்கு, 120க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள், பணி நிமித்தமாக அருகே உள்ள நகரங்களுக்குச் சென்று திரும்ப, பஸ் பயணத்தையே நம்பி உள்ளனர்.
ஆனால், பஸ்களில் பயணியருக்கு ஏதேனும் காயம், நோய் பாதிப்பு இருந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டால், சிகிச்சை அளிக்க, மருந்துப் பொருட்களை உள்ளடக்கிய முதலுதவி பெட்டி கிடையாது.
இதேபோல, தீ தடுப்பு கருவிகள், கட்டணம் மற்றும் நேரத்தை குறிப்பிடும் வழித்தட 'மேப் ' உள்ளிட்டவையும் கிடையாது. இதனால், ஏதேனும், விபத்து, அசம்பாவிதம் நடந்தால், அதற்கேற்ப துரித நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களுக்காக, பஸ்களின் இயக்கத்தில், கடும் போட்டி நிலவுகிறது. அதிவேகத்தில் இயக்கப்படும் பஸ்களால், அவ்வப்போது சிறு விபத்துக்கள் ஏற்படுகிறது.
சிலர், உடல்நலக்குறைவால், மயக்கம், தலைசுற்றல் உள்ளிட்டவற்றால் பாதிக்கின்றனர். அத்தகைய சூழலில், முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில், தண்ணீர் பாட்டிலும், முதலுதவி பெட்டியும் பஸ்சில் இருப்பதில்லை.
சில பஸ்களில் தீ தடுப்பு கருவிகள் இருந்தாலும், அதில் முழுமையான அளவில் திரவ கார்பன் டை ஆக்சைடு இருப்பதில்லை. நேற்று, பொள்ளாச்சியில் இருந்து, கோவைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சில், ஒயரில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பரவியது. அச்சமயத்தில் தீ தடுப்பு கருவி இருந்திருந்தால், தீ பரவலை தடுத்திருக்க முடியும்.
எனவே, அனைத்து பஸ்களிலும், தீ தடுப்பு கருவிகள், மருந்துப் பொருட்களை உள்ளடக்கிய முதலுதவி பெட்டி, தண்ணீர், வழித்தட மேப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

