/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவு பதனிடுதல்! எதிர்கால வணிக உலகின் நம்பிக்கை ஸ்டார்ட் - அப் பயிற்சி முகாமில் தகவல்
/
உணவு பதனிடுதல்! எதிர்கால வணிக உலகின் நம்பிக்கை ஸ்டார்ட் - அப் பயிற்சி முகாமில் தகவல்
உணவு பதனிடுதல்! எதிர்கால வணிக உலகின் நம்பிக்கை ஸ்டார்ட் - அப் பயிற்சி முகாமில் தகவல்
உணவு பதனிடுதல்! எதிர்கால வணிக உலகின் நம்பிக்கை ஸ்டார்ட் - அப் பயிற்சி முகாமில் தகவல்
ADDED : நவ 29, 2024 11:43 PM

கோவை: “உணவு பதனிடும் தொழிலுக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. ஸ்டார்ட் அப் தொடங்க முயல்பவர்கள், வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில் தாராளமாக கால்பதிக்கலாம்” என, வேளாண் ஸ்டார்ட்-அப் பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.
கோவை விழாவின் ஒரு பகுதியாக, 'உங்களின் அடுத்த ஸ்டார்ட்-அப் வேளாண் துறை சார்ந்ததாக இருக்கட்டும்' என்ற தலைப்பிலான ஒரு நாள் பயிலரங்கு, கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில் உள்ள, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் நடந்தது.
இதில், வேளாண் தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஞானசம்பந்தம் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாடு முழுக்க மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் 160 'இன்குபேஷன்' மையங்கள் செயல்படுகின்றன. நமது வேளாண் பல்கலை வளாகத்தில் உள்ள தொழில்நுட்ப காப்பகம், வேளாண் மற்றும் அது சார்ந்த தொழில்முனைவுக்கு வழிகாட்டுகிறது.
வேளாண் மற்றும் அது சார்ந்து ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. வேளாண் ஸ்டார்ட் அப் தொழில்களில் உணவு பதனிடல் துறை தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்திலும் மிகச்சிறப்பாகவே இருக்கும். இடுபொருட்கள், பண்ணை இயந்திரமயமாக்கல், உணவு பதனிடல் சார்ந்த உபகரணங்கள் தயாரிப்பு, விதை, வேளாண் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவை வேளாண்மையில் பயன்படுத்துதல், ஏரோபோனிக்ஸ், ஹைட்ரோபோனிக்ஸ், அக்வாபோனிக்ஸ் போன்ற அடுக்கு வேளாண்மை முறை என, வேளாண்மை மற்றும் அது சார்ந்து ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன.
மதிப்புக்கூட்டல், சந்தைக்கான தேவை, நிதி, தொழில்நுட்பம் என ஒரு தொழில்முனைவுக்குத் தேவையான அனைத்துத்துறை சார்ந்தும் வழிகாட்ட, வேளாண் தொழில்நுட்ப வணிகக் காப்பகம் தயாராக இருக்கிறது.
இதை தொழில்முனைவோராக விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஸ்டார்ட் அப் சார்ந்து பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டன. பயிலரங்கில், கோவை விழா ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ராம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

