UPDATED : மார் 11, 2024 02:38 AM
ADDED : மார் 11, 2024 01:38 AM

கோவை புறநகரில் கோர்ட் உத்தரவை மீறி, சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளுக்கு அரசு அதிகாரிகள், போலீசார் துணைபோவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை, சின்னத்தடாகம், பெரியதடாகம், கணுவாய், தொண்டாமுத்துார் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் ஏராளமான செங்கல்சூளைகள் சட்டவிரோதமாக இயங்கின.
விதிமீறி செங்கல்சூளைகள் செயல்படுவதாக வழக்குத் தொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து, 2 கி.மீ., தொலைவிற்குள் இருக்கும் அனைத்து செங்கல் சூளைகளையும் மூட கோர்ட் உத்தரவிட்டது. அதையடுத்து, 200க்கும் மேற்பட்ட சூளைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
ஆனாலும், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஆதரவு பெற்ற சூளைகள் மறைமுகமாக செயல்பட்டன.
தொடர் புகாரையடுத்து, அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த சூளைகளில் மின் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் செங்கல் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு லோடு (4,500 கல்), ரூ. 54 ஆயிரம் வரை விலையேற்றம் கண்டுள்ளது.
இதை தங்களுக்கு சாதகமாக்கி தடாகம் பகுதிகளில் மறைமுகமாக செங்கல் தயாரிப்பு நடக்கிறது. ஆயில் இயந்திரங்கள் மற்றும் கை அச்சு வாயிலாக உற்பத்தி செய்து, மறைவான இடங்களில் காய வைக்கின்றனர்.
கோடை வெயிலும் கை கொடுப்பதால் உற்பத்தி தீவிரமாகியுள்ளது. காய்ந்த செங்கல்களை ஒரு கல், ரூ.6க்கு தொண்டாமுத்துார் வட்டார சூளைகளுக்கு கடத்துகின்றனர்.
அங்கு, இரவு நேரத்தில் வேக வைத்து முதல்தர செங்கல், ரூ. 13க்கும், இரண்டாம், மூன்றாம் தரத்தை, ரூ.12 - 11க்கும் விற்பதாக தெரிகிறது.
இதற்கு சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
விதிமீறி இயங்கும் செங்கல்சூளைகளை கண் காணித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டிய உளவு போலீசாரோ, சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்களுடன் கைகோர்த்து செங்கல் சூளைகளில் மாமூல் வசூலித்து உயரதிகாரிகளுக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது.
இதன்வாயிலாக, உளவு போலீசாரும் பெரும் தொகை பார்த்து வருகின்றனர். செங்கல்சூளைகள் மூடப்பட்டு, மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் இயற்கைச்சூழல் திரும்பி வருகிறது.
இந்நிலையில், இதுபோன்ற செயல்கள் இயற்கை ஆர்வலர்களை வேதனையடைய செய்கிறது. எனவே, இப்பிரச்னைக்கு மாவட்ட கலெக்டர் உரிய தீர்வு காண வேண்டும்.

